கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயணம்- துரைவைகோ தொடங்கி வைத்தார் !!
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட் டத்தின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி பாராளுமன்றம் வரை நீதி கேட்டு நெடும்பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இந்த பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இன்று காலை நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட தலைவர் செல்லப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வின்ஸ் ஆண்டோ வரவேற்று பேசினார். இந்த நீதி கேட்டு நெடும் பயணத்தை ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ தொடங்கி வைத்தார்.
முடிவில் மாவட்ட பொருளாளர் பத்மதாஸ் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து டெல்லி பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் நீதி கேட்டு நெடும்பயணம் புறப்பட்டு சென்றனர். இதில் ஏராளமான விவசாயிகள் பச்சைத் துண்டு அணிந்து பங்கேற்றனர். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த நீதி கேட்டு நெடும்பயணம் தமிழ்நாடு கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக வருகிற 20-ந்தேதி டெல்லி சென்று அடைகிறது. மொத்தம் 19 நாட்கள் இந்த நீதி கேட்டு நெடும்பயணம் நடக்கிறது.