;
Athirady Tamil News

கொரோனா காலத்தில் வாங்கிய மருத்துவ உபகரணங்கள் ஏலம்- மேயர் பிரியா தகவல்!!

0

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்றக்கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் கடந்த 28-ந்தேதி நடந்தது. அப்போது, மறைந்த தி.மு.க. கவுன்சிலர் ஷீபா வாசுவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மீண்டும் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் மாநகராட்சி மன்றக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மேயர் பிரியா பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:- துரை ராஜ் வார்டு குழு தலைவர்:- என்னுடைய வார்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில், கொரோனா காலத்தின்போது கொரோனா தடுப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டு இருந்தது.

கொரோனா பரவல் முடிந்துவிட்டதால் இதை அகற்றித்தரவேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதை அகற்றி மீண்டும் அதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். மேயர் ஆர்.பிரியா:- கொரோனா காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் பல கட்டிடங்களில் அப்படியே இருப்பதாக பல புகார்கள் வந்துள்ளது. இந்த உபகரணங்களில் எது தேவை என்று பார்த்து பள்ளிகளுக்கும், ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பி பயன்படுத்த உள்ளோம். இதுபோக மீதம் உள்ள பயன்படுத்தப்படாத மருத்துவ உபகரணங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும். 42-வது வார்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் ரேணுகா:- மழைநீர் வடிகாலில் தேங்கியுள்ள தண்ணீரால் கொசு பரவல் அதிகமாக உள்ளது. கடந்த 3 மாதங்களாக 104 வார்டுகளில் சுகாதார ஆய்வாளர்கள் இல்லை.

5 வார்டுகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 மாதமாக டாக்டர்கள் இல்லை. எனவே, தனிக்கவனம் செலுத்தி பணியிடங்களை நிரப்பவேண்டும். மேயர் ஆர்.பிரியா:- ஒவ்வொரு பகுதியிலும் தீவிர கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. ‘லேப் டெக்னீசியன்’, டாக்டர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். கூடுதலாக 140 டாக்டர்கள் மாநகராட்சி மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 142-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி (வார்டு குழு தலைவர்) :- கொரோனா காலத்தில் பணிபுரிந்த சுகாதாரத்துறை பணியாளர்களை மாநகராட்சி கவுரவிக்கவேண்டும். இதேபோல், உறுப்பினர்கள் தங்களுடைய பணிக்காலத்தில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கவேண்டும்.

மேயர் ஆர்.பிரியா:- உறுப்பினர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் குடும்பநல நிதியாக வழங்கவேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். இதுகுறித்து அரசிடம் மீண்டும் ஆலோசனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மேயர் ஆர்.பிரியா பதில் அளித்தார். நேரமில்லா நேரத்தில் கணக்கு குழு தலைவர் தனசேகரன் (தி.மு.க.) பேசியதாவது:- சென்னையில் மொத்தம் 786 பூங்காக்கள் உள்ளன. இவற்றில் 142 பூங்காக்கள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 57 பூங்காக்கள் தனியாருக்கு தத்து கொடுக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள பூங்காக்கள் டெண்டர் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பெரும்பாலானவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேயராக இருந்தபோது உருவாக்கப்பட்ட பூங்காக்கள்.

இதனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த பூங்காக்கள் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு இருக்கிறது என தணிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மாத இறுதியில் பூங்காக்களின் பராமரிப்பு ஒப்பந்தமும் முடிவடைகிறது. எனவே, கடந்த காலங்களில் பூங்காக்களை முறையாக பராமரிக்காத ஒப்பந்ததாரர்களை புதிய டெண்டரில் பங்கேற்க தடைவிதிக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, “ஒப்பந்தம் முடியும் நிலையில் உள்ளது. 2023-24 ஆண்டுக்கான பூங்கா பராமரிப்பு பணியை எப்படி மேற்கொள்வது? என்பது குறித்து மேயர், துணை மேயர் மற்றும் அதிகாரிகள் உடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மண்டலம் 7 மண்டலங்களில் 233 உட்புற சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.