வனவிலங்குகளை வேட்டையாட சென்றபோது மாயம்- அமேசான் காட்டில் ஒரு மாதமாக பூச்சி, புழுக்களை சாப்பிட்டு உயிர் பிழைத்த இளைஞர்!!
பொலிவியன் நாட்டை சேர்ந்த 30 வயதான ஜொனாடன் அகோஸ்டா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி தனது 4 நண்பர்களுடன் உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடான அமேசான் காட்டிற்கு வேட்டையாட சென்றுள்ளார். அப்போது, அகோஸ்டா அமேசான் காட்டில் வழி தவறி காணாமல் போயுள்ளார். தனது நண்பர்களுடனான தொடர்பையும் அவர் இழந்தார். இதனால், அகோஸ்டாவிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லாததை அடுத்து, அவரது குடும்பத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, மீட்பு குழுவினர் அமேசான் காட்டில் முழு வீச்சில் தேடி வந்தனர். இந்நிலையில் அகோஸ்டா மெலிந்த உடல் நிலையுடன் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டார். அமேசான் காட்டில் ஒரு மாதமாக உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்த அகோஸ்டா, அங்குள்ள பூச்சி, புழுக்களை திண்று பசியாற்றியுள்ளார். மழை பெய்யும்போது தான் போட்டிருக்கும் பூட்ஸ் ஷூ மூலம் தண்ணீர் பிடித்து குடித்துள்ளார். தண்ணீர் கிடைக்காத சில இடங்களில் தனது சிறுநீரையே குடித்து உயிர் பிழைத்து வந்துள்ளார். காட்டைவிட்டு வெளியேற திசை தெறியாமல் சுமார் 40 கிலோ மீட்டர் அகோஸ்டா நடந்துள்ளார்.
இதனால் அவர் சுமார் 17 கிலோ உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டுள்ளார். “நான் கடவுளிடம் மழையைக் கேட்டேன், அது பெய்யாமல் இருந்திருந்தால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்” என்று அகோஸ்டா குறிப்பிட்டார். இவர் கூறுவது மட்டும் உண்மை எனில், அமேசான் மழைக்காடுகளில் இவ்வளவு காலம் உயிர் பிழைத்த ஒரே நபர் ஜொனாடன் அகோஸ்டா என்ற பெருமையை பெறுவார் என்றும் கூறப்படுகிறது.