ஐ.நா-வில் பேசிய சர்ச்சை பேச்சு விவகாரம்; இந்தியா எங்களுடைய குரு பீடம்: வீடியோவில் சாமியார் விஜயப்பிரியா விளக்கம்!!
ஐ.நா-வில் இந்தியா குறித்து சர்ச்சை கருத்து கூறிய நித்யானந்தரின் பிரதிநிதி, தற்போது கண்டனங்கள் எழுந்ததால் மறுப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கடத்தல், குழந்தைகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், பாலியல் ெதாடர்பான புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தா, கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். தென் அமெரிக்க நாடான ஈக்வடார் மற்றும் டிரினிடாட் அருகே தீவு ஒன்றை வாங்கி, ‘கைலாசா’ என்ற பெயரில் புதிய நாடாக அறிவித்து செயல்பட்டு வருகிறார்.
இந்த தீவின் பெண் சாமியார் விஜயப்ரியா தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், கடந்த பிப். 22ம் தேதி ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில், இந்தியாவுக்கு எதிரான சில கருத்துகளை வெளியிட்டனர். இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதையடுத்து நித்யானந்தா குழுவினர் பேசிய கருத்துகளை ஐ.நா சபை புறக்கணித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விஜயப்பிரியா வெளியிட்ட பதிவில், ‘ஐ.நா-வில் நான் பேசிய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே கருத்துகள் திரித்து வெளியிடப்படுகிறது. நித்யானந்தர் பிறந்த நாட்டில் (இந்தியா) இருக்கும் சில இந்து விரோத சக்திகளால் அவர் துன்புறுத்தப்படுகிறார் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஐக்கிய கைலாசா நாடு, இந்தியாவை உயர்வாகக் கருதுகிறது; எங்களது குரு பீடமாக இந்தியாவை மதிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.