ஜெர்மனியில் ஓட்டுநரில்லா மின்சார வாடகை கார் அறிமுகம்: வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கே செல்கிறது.. விரும்பிய இடத்தில் இறங்கலாம்..!!!
ஜெர்மனியை சேர்ந்த வாடகை கார் நிறுவனம் ஒன்று ஓட்டுநர் இல்லா மின்சார கார்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கும் சேவையை தொடங்கியுள்ளது. நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் அந்த காரை வாடிக்கையாளர் தேவைப்படும் இடத்திற்கு இயக்கி இறங்கி கொள்ளலாம். இதற்காக அந்த காரை வாடிக்கையாளர் பார்க்கிங் பகுதியில் நிறுத்த அவசியமில்லை.
காரில் பயணம் செய்யும் வாடிக்கையாளர் விரும்பிய இடத்தில் இறங்கியவுடன் மீண்டும் அந்த கார் ரிமோட் கண்ட்ரோல் மூலம் தானாக திரும்பிவிடுகிறது. வே என்ற புத்தாக்க நிறுவனம் ஐரோப்பிய சாலைகளில் முதன்முதலாக ஓட்டுநர் இல்லா கார்களை இயக்கியதாகவும், சொந்தமாக கார் வைத்துக்கொள்ள விரும்பாதவர்களை மனதில் வைத்து இந்த சேவையை அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது. ஜெர்மனி தலைநகரில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு 2311 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள அண்டை நாடான ஸ்பெயினில் இருந்து ஓட்டுநர் இல்லா மின்சார கார் இயக்கி வரப்பட்டது.
நவீன தொழில்நுட்பம் மூலம், ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த காருக்கு நெட்வொர்க்கிங் சிக்னல் கிடைக்காதபோது மாற்று நெட்ஒர்க் மூலமாகவும் காரை இயக்க முடியும். இதனால் பொது போக்குவரத்து விரும்பும் வாடிக்கையாளர்கள் இனி ஓட்டுநர் இல்லா மின்சார காரை பயன்படுத்தி எளிதாக விரும்பிய இடத்திற்கு செல்ல முடியும்.