பாராளுமன்ற தேர்தலில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்- கனிமொழி எம். பி. பேச்சு!!
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 40 நாட்கள் 70 நிகழ்ச்சிகளை மாவட்ட செயலாளர் அமைச்சர் பி. கே. சேகர் பாபு ஏற்பாடு செய்துள்ளார். மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா என்ற தலைப்பில் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களும் நல உதவி திட்டங்கள் வழங்கும் விழாவும் நடைபெற்று வருகிறது.
அயனாவரத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தி. மு.க. மகளிர் அணி சார்பில் சுதா தீனதயாளன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு அமைச்சர் பி. கே. சேகர் பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம். பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நமக்கு கிடைத்த மிகப்பெரிய இமாலய வெற்றி. இந்த வெற்றியை தடுப்பதற்கு பல குறுக்கு வழிகளை பலர் செய்தனர். அவையெல்லாம் முறியடித்து மிகப்பெரிய சாதனையை முதல்வர் செய்துள்ளார்.
ஜாதி, மதம், இனம் அனைத்தும் ஒன்றுபட்டு சுதந்திரம் பெற்ற நம் இந்தியா, இன்று கருத்துரிமை, பேச்சுரிமை, ஜனநாயகம் பறிக்கப்பட்டு மக்களின் வெறுப்பு அரசியலாக ஒன்றிய அரசு ஆட்சி செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியை மீட்டெடுக்க வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பேராசிரியை சாரதா நம்பி ஆரூரான், வழக்கறிஞர் மதிவதனி, ஏ. வேதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.