;
Athirady Tamil News

தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீடு வழக்கு: குட்கா நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!!

0

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டு தோறும் இதுசம்பந்தமாக அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அரசின் தடையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் குட்கா நிறுவனங்கள் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த ஐகோர்ட்டு குட்கா மீதான தடையை நீக்கியது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக் காட்டவில்லை.

சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சட்டங்களும் புகையிலைப் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்க வழிவகை செய்யவில்லை. அந்த சட்டங்கள் தடை விதிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை.

உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்கிறோம் என்று தெரிவித்தனர். குட்கா, பான் மசாலா மீதான தடையை நீக்கி உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடும் போது, இந்த வழக்கு மிகவும் முக்கியமானது. தொண்டை மற்றும் வாய் புற்றுநோய் தொடர்பாக தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய்களை குறைக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் குட்கா, பான் மசாலா மீதான தடை நீக்கம் மக்களின் பொது சுகாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே குட்கா, பான் மசாலா மீதான தடை நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் கூறும்போது, இந்த வழக்கை படித்து பார்க்க வேண்டியுள்ளது. வழக்கின் முழுமையான விவரம் தெரியாமல் எப்படி தடை விதிக்க முடியும். எனவே முதலில் வாதம் வையுங்கள். எதிர் மனுதாரர்களின் வாதங்களை கேட்க வேண்டும் என்றனர். மேலும் குட்கா நிறுவனங்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர் இவ்வழக்கு வருகிற 20-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.