;
Athirady Tamil News

உக்ரைன் விடயத்தில் அமெரிக்காவின் ஆதரவு – ரஷ்யாவுக்கு நேரடி செய்தி !!

0

உக்ரைன் யுத்தம் நீடிக்கும் வரை அந்த நாட்டிற்கு தாம் ஆதரவு வழங்குவோம் என ரஷ்யாவிடம் அமெரிக்கா நேரடியாக தெரிவித்துள்ளது.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவை சந்தித்த போது அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் இதனைக் கூறியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய பொருளதார நாடுகளின் கூட்டமைப்பான ஜி 20 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இன்று டெல்லியில் நடைபெற்றது.

இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் நடைபெறும் ஜி 20 அமைப்பின் இரண்டாவது உயர்மட்ட சந்திப்பாக இந்த மாநாடு அமைந்துள்ளது.

இந்த மாநாட்டின் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோ ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

உக்ரைன் மீதான படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இருவரும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு 10 நிமிடங்களுக்கும் குறைவாகவே நீடித்ததாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மூத்த அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இதன்போது ரஷ்யாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அமெரிக்க பிரஜையான போல் வீலனை விடுவிக்க வேண்டும் என்பதுடன், அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் ரஷ்யா மீண்டும் இணைய வேண்டும் என அன்ரனி பிளிங்கன், சேர்ஜி லவ்ரோவிடம் வலியுறுத்தினார்.

உக்ரைன் விடயத்தில் அமெரிக்காவின் ஆதரவு தொடர்பில் சேர்ஜி லவ்ரோ எவ்வாறு பதில் அளித்தார் என்ற தகவல்களை இராஜாங்க திணைக்களம் வெளியிடவில்லை.

எனினும் உக்ரைன் விடயத்தில் ரஷ்யாவின் போக்கானது விரைவாக மாறுவதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை என இராஜாங்க திணைக்கள அதிகாரி கூறியுள்ளார்.

இதேவேளை, ஜி 20 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் உக்ரைன் போர் விடயம் குறித்து காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

ரஷ்யாவின் நியாயமற்ற மற்றும் ஆத்திரமூட்டல் செயற்பாடுகள் எதுவுமற்ற போர் காரணமாக ஜி 20 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு சிதைந்துள்ளதாக அன்ரனி பிளிங்கன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும் மேற்குலக நாடுகள் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களை விடுப்பதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

வளரும் நாடுகளைப் பாதிக்கும் பிற பிரச்சினைகளில் கவனம் செலுத்த விரும்பிய போதிலும், உக்ரைன் தொடர்பான விடயத்தில் சமரசத்தை செய்ய முடியாது போனதாக மாநாட்டிற்கு தலைமைத்தவத்தை வழங்கும் இந்தியா கூறியுள்ளது.

ஜி 20 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கூட்டு அறிக்கையை வெளியிட முயற்சித்தோம் என்ற போதிலும், நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் அதிகமாக இருந்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் 19 செல்வந்த நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய G20 அமைப்பானது, உலகப் பொருளாதார உற்பத்தியில் 85 வீதத்தையும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.