அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு 10 ஆண்டு சிறை !!
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கி. வக்கீலான இவர் பெலாரசில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1980-களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் ஆவார். பெலாரசில் ஜனநாயகம் வலுப்படவும் அமைதி வழியில் முன்னேற்றம் ஏற்படவும் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவரான அலெஸ் பியாலியாட்ஸ்கி, கடந்த 1996-ம் ஆண்டு ‘வியாஸ்னா மனித உரிமைகள் மையம்’ என்கிற பெயரில் மனித உரிமை அமைப்பு ஒன்றை தொடங்கினார். இந்த அமைப்பு அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதி மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் பெலாரசின் அதிபராக இருந்து வரும் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, தேர்தலில் முறைகேடு செய்து அதிபரானதாக அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக நாட்டில் மாபெரும் போராட்டம் வெடித்தது. பல மாதங்கள் நீடித்த இந்த போராட்டம் பெலாரசை அதிரவைத்தது. இந்த போராட்டத்தை இரும்புகரம் கொண்டு ஒடுக்கிய அரசு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தது.
இதனிடையே அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்கு நிதியுதவி செய்ததாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் அலெஸ் பியாலியாட்ஸ்கி மீது வழக்கு தொடரப்பட்டது. அதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தினர். ஆனால் அதை பொருட்படுத்தாத பெலாரஸ் அரசு அலெஸ் பியாலியாட்ஸ்கி மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
இதற்கிடையில் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். இந்த நிலையில் அலெஸ் பியாலியாட்ஸ்கி மீதான வழக்கை விசாரித்து வந்த பெலாரஸ் கோர்ட்டு நேற்று அவரை குற்றவாளியாக அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.