மேக்கப்பால் மணப்பெண்ணின் முகம் பாதிப்பு; திருமணத்தை நிறுத்திய மணமகன்!!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. கடந்த வாரம் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அவர்களின் திருமணம் 2-ந்தேதி (நேற்று முன்தினம்) அரிசிகெரேயில் நடக்க இருந்தது. இந்த நிலையில், திருமணத்துக்கு சில தினங்களுக்கு முன்பாக மணப்பெண்ணான இளம்பெண் ‘மேக்கப்’ போட முடிவு செய்தார்.
அதன்படி அவர், அரிசிகெரேயில் உள்ள கங்கா என்பவருக்கு சொந்தமான அழகு நிலையத்துக்கு சென்றார். அங்கு மணப்பெண்ணுக்கு கங்கா ‘மேக்கப்’ போட்டு அழகுப்படுத்தினார். இந்த நிலையில் திருமணத்துக்கு சில நாட்கள் இருப்பதால், ‘மேக்கப்’ கலைந்து விட கூடாது என்பதற்காக, அவர் வெந்நீரில் ஆவி பிடித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வெந்நீரில் ஆவி பிடித்ததால் இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியது.
மேலும், முகம் வெந்து கொப்புளங்கள் வந்தன. கண்கள் மற்றும் கன்னமும் வீங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர். இந்த நிலையில், மேக்கப் போட்ட மணப்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் நேற்று முன்தினம் நடக்க இருந்த திருமணத்தை வாலிபர் நிறுத்தினார். இதனால் மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், மணமகளின் குடும்பத்தினர் அழகு நிலைய உரிமையாளர் கங்கா மீது அரிசிகெரே போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேக்கப் போட்ட இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் திருமணமே நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.