நகைக்கடை ஊழியர் கொலையில் கேரளா வாலிபர் கைது!!
நகைக்கடை ஊழியர் கொலை தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த பந்தர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மல்மட்டா பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் ராகவேந்திரா ஆச்சாரியா. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி மர்ம நபரால் ராகவேந்திரா கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலையில் தொடர்புடைய மர்மநபர் குறித்து முதலில் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசார் நகைக்கடை மற்றும் அதை சுற்றியுள்ள ஓட்டல், வீடுகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதில் அந்த நபர் கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஷிபாஸ் (வயது33) என்று தெரியவந்தது.
இவர் மங்களூருவில் உள்ள கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு, துபாயிற்கு வேலைக்கு சென்றார். பின்னர் மீண்டும் மங்களூருவிற்கு திரும்பினார். அங்கு மனைவி, குழந்தையுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கடைக்கு சென்ற ஷிபாஸ், தங்க நகைகளை கொள்ளையடிப்பதற்காக ராகவேந்திரா ஆச்சாரியாவை கொலை செய்திருப்பதாக தெரியவந்தது. இது குறித்து பந்தர் போலீசார், ஷிபாசை கைது செய்ய தனிப்படை அமைத்தனர். அவர்கள் கேரளா மாநிலம் மற்றும் தட்சிண கன்னடாவில் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஒரு ஆண்டிற்கு பின்னர் அவர் கேரளா மாநிலம் காசர்கோட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் ஷிபாசை கைது செய்தனர். பின்னர் அவரை தட்சிண கன்னடா அழைத்து வந்த போலீசார் மங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.