ஆளுமையுள்ளவர்களை பயன்படுத்தாமல் விட்டது பல்கலைக்கழகத்தின் தவறு – யாழ் பல்கலையின் சிரேஷ்ட பேராசிரியர் ரவிராஜன்!!
ஆளுமையுள்ள எம்மவர்களை பயன்படுத்தாமல் விட்டது பல்கலைக்கழகத்தின் தவறு என்பதை நான் உணர்கின்றேன் என யாழ். பல்கலைக்கழக பௌதீகவியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்தார்.
யாழ். ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரியின் பழைய மாணவரும் அணு விஞ்ஞானியும் பேராசிரியரும் தொழிலதிபரும் சமூக சேவையாளரும் கனேடிய அரசியல் செயற்பாட்டாளருமான கலாநிதி வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளையின் ‘அணுவைத் துளைத்து’ நூலின் வெளியீட்டு விழா அண்மையில் கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
கடின உழைப்பு எதையும் வெல்லும் என்பதைத்தான் கலாநிதி வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளையின் வாழ்க்கைச் சரித்திரமாக நான் பார்க்கிறேன்.
மிக வறிய விவசாய குடும்பத்தில் இவர் பிறந்து சாதித்திருக்கிறார். குறிப்பாக, எல்லா விதமான தொழில்களிலும் மிக உன்னதமான தொழில்களாக ஆசிரியர், மருத்துவர் என பல இருக்கின்றன. ஆனால், இவர்கள் எல்லோருக்கும் உணவளிப்பது விவசாயம் ஆகும். அத்தகைய விவசாயியின் மகனாக பிறந்து, எமது நாட்டில் விவசாயத்துக்கான வசதி, வாய்ப்புக்கள் இல்லாத நிலையிலும், வறுமையிலிருந்து விடுபட்டு உச்சத்தை தொட்டிருக்கிறார்.
இத்தகைய ஒரு சாதனையாளனின் சுயசரிதை நூலின் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு பெருமையடைகிறேன்.
நானும் இந்தத் துறையைச் சார்ந்தவன் என்ற வகையில் இதுவரை காலத்திலும் இத்தகையதொரு ஆளுமையை சந்திக்காதது ஏமாற்றத்தை தருகிறது.
அது மட்டுமன்றி, இவ்வாறான ஆளுமைகளை பல்கலைக்கழகம் பயன்படுத்தாமல் விட்டுள்ளமை பெரும் தவறாகும். அதை எண்ணி கவலைகொள்கிறேன். இனியும் இவ்வாறான நிலை ஏற்படாதிருக்க வேண்டும்.
எங்கள் பிரதேசங்களில் உள்ள ஆளுமைகளை நாங்கள் அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து பல்வேறு விடயங்களை எதிர்கால சந்ததிக்காக கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆளுமையாளர்களின் அனுபவங்களைப் பெற்றே எமது தற்போதைய ஆளுமையையும் எதிர்கால ஆளுமைத்திறனையும் பயனுள்ளதாக்கிக்கொள்ள முடியும்.
ஆசிரியரது வாக்கு மிகவும் சவாலானது. நான் படித்த இளவாலை கென்றியரசர் கல்லூரியின் மகுட வாக்கியமான ‘கடின உழைப்பு எதையும் வெல்லும்’ என்பதை அணு விஞ்ஞானியினது வாழ்க்கைச் சரித்திரத்தின் ஒரு முடிவாக எடுத்துக்கொள்கிறேன்.
அணு விஞ்ஞானியின் வாழ்க்கை ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அவர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அவரது அனுபவங்களை நாம் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.