கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானி கொடூர கொலை!
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், முக்கிய விஞ்ஞானி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட விஞ்ஞானி, ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான Andrey Botikov என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ல் Sputnik V கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் மொத்தம் 18 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒருவர் தான் கொல்லப்பட்ட Andrey Botikov. வடமேற்கு மாஸ்கோவில் அமைந்துள்ள அவரது குடியிருப்பில் வைத்து, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் ஒருமுறை இவரது குடியிருப்புக்குள் புகுந்து பணத்திற்காக ஒருவர் மிரட்டிய விவகாரத்தில், உயிர் தப்பியிருந்தார். இந்த நிலையில், தற்போது விஞ்ஞானி Andrey Botikov கொலை வழக்கில் 29 வயதான நபர் ஒருவர் கைதாகியுள்ளார்.
சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்ப முயன்ற போது, துரித நடவடிக்கையால் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதுடன், அவர் மீது கொலை வழக்கும் பதியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
கைதான நபர் முதற்கட்ட விசாரணையிலேயே குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் விஞ்ஞானியை கொலை செய்த நபர் ஏற்கனவே, குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றவர் எனவும் கூறப்படுகிறது.
10 ஆண்டுகள் வரையில் அந்த நபர் சிறை தண்டனை அனுபவித்தவர் எனவும், பாலியல் தொழில் செய்யும் விடுதி ஒன்றை நடத்தி வந்தவர் எனவும் கூறப்படுகிறது. Andrey Botikov தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியலுக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
Sputnik V கொரோனா தடுப்பூசியை உருவாக்கியதற்காக நாட்டின் உயரிய விருதையும் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.