சிசோடியாவிடம் கேட்ட கேள்விகளையே திரும்ப திரும்ப கேட்காதீங்க… சிபிஐக்கு அறிவுறுத்திய நீதிமன்றம்!!
டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்டதையடுத்து சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் சிசோடியாவின் சிபிஐ விசாரணைக் காவல் முடிந்த நிலையில் அவரை இன்று டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை மேலும் விசாரிக்க வேண்டியிருப்பதால் விசாரணைக் காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கும்படி சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது சிசோடியா கோர்ட்டில் கூறும்போது, என்னை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் 9 முதல் 10 மணிநேரம் வரை அமர வைத்து, கேட்ட கேள்விகளையே திரும்ப, திரும்ப கேட்டனர். அது மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் இருந்தது, என குற்றம்சாட்டினார். சிசோடியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணன், கோர்ட்டில் கூறும்போது, சிசோடியாவின் சி.பி.ஐ. காவலை நீட்டிக்க கோருவதற்கான விசயங்களை அவர்கள் நியாயப்படுத்தவில்லை என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் சிசோடியாவின் விசாரணைக் காவலை 6ம் தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், கேட்ட கேள்விகளை சிசோடியாவிடம் திரும்ப திரும்ப கேட்க வேண்டாம் என சிபிஐ-யிடம் நீதிபதி கேட்டுக்கொண்டார். சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை 10ம் தேதி நடைபெற உள்ளது.