தந்தையின் மறைவுக்கு இரங்கல்: பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த உமேஷ் யாதவ்!!
உமேஷ் யாதவின் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவர் பிப்ரவரி 22 அன்று தனது 74 வயதில் காலமானார். இதனையடுத்து உமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் கடந்த மாதம் 27-ந் தேதி இரங்கல் தெரிவித்திருந்தார். அதில் தனது மகனை வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக மாற்றியதில் திலக் யாதவின் பங்கைப் பாராட்டினார். உமேஷின் தந்தையின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். இந்நிலையில் தந்தையில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடிக்குக்கு உமேஷ் யாதவ் நன்றி தெரிவித்தார். அதில், எனது தந்தையின் மறைவுக்கு இரங்கல் செய்தி அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு நன்றி. இந்த கடிதம் எனக்கும் என் குடும்பத்துக்கும் ஆறுதலாக உள்ளது என கூறினார். அந்த பதிவில் பிரதமரின் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது.
உமேஷ் யாதவ் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியா சார்பில் விளையாடி வருகிறார். இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் உமேஷ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் இதுவரை இந்தியாவுக்காக 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011 ஆம் ஆண்டு டெல்லியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட்டில் அறிமுகமானார். உமேஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 168 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.