;
Athirady Tamil News

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்தனர்: 75 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்த சீக்கிய சகோதரர்கள் குடும்பம்!!

0

பல ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்களையோ, உறவினர்களையோ பார்க்கும்போது நம் முகத்தில் எவ்வளவு பிரகாசம் ஏற்படும். இதேபோல தான் 75 ஆண்டுகள் கழித்து நேரில் சந்தித்து கொண்ட சீக்கிய குடும்பத்தினர் ஆடி,பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆனந்த கண்ணீர் விட்டனர். அரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டம் கோம்லா கிராமத்தை சேர்ந்தவர்கள் குருதேவ் சிங், தயாசிங். இவர்களது தந்தை சிறு வயதிலேயே இறந்து விட்டதால் அவரது நண்பர் கரீம் பக்ஷ் வீட்டில் வளர்ந்தனர். இந்த நிலையில் கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது சீக்கிய சகோதரர்களும் பிரிந்தனர். மூத்த சகோதரர் குருதேவ் சிங் தந்தையின் நண்பர் கரீம் பக்ஷூடன் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜங்க் மாவட்டத்தில் குடிபெயர்ந்தார். இந்த ஊர் லாகூரில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு சென்றதும் குருதேவ் சிங் முஸ்லீமாக மாறினார்.

அவரது பெயரை குலாம் முகமது என கரீம் பக்ஷ் மாற்றினார். அவரது சகோதரர் தயாசிங் அரியானாவில் உள்ள தனது மாமாவுடன் இருந்து விட்டார். அதன் பிறகு 2 சகோரர்கள் குடும்பத்தினர் இடையே எந்தவித தொடர்பும் இல்லாமல் போய் விட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குருதேவ் சிங் இந்தியாவில் வசிக்கும் தனது சகோதரரை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பாக அவர் இந்திய அரசுக்கு பல முறை கடிதம் அனுப்பினார். ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. கடைசியில் தனது தம்பியை பார்க்காமலேயே அவர் சமீபத்தில் இறந்து விட்டார். இதனால் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற அவரது மகன் முகமது ஷெரீப் முடிவு செய்தார்.

சமூக வலைதளங்களில் தனது சித்தப்பா தயாசிங் குறித்த தகவல்களை தேடினார். 6 மாதங்களுக்கு முன்பு சமூகவலைதளம் மூலம் தயாசிங் பற்றிய விவரம் தெரிய வந்ததும் முகமது ஷெரீப் முகம் மலர்ந்தார். சித்தப்பா குடும்பத்தினர் அரியானா மாநிலத்தில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சகோதரர்கள் 2 பேர் குடும்பத்தினரும் நேரில் சந்திக்க திட்டமிட்டனர். பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் குருத்வாராவில் அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக தயாசிங் குடும்பத்தினர் விசா வாங்கிக்கொண்டு அங்கு சென்றனர்.

2 குடும்பத்தினரும் நேரில் சந்தித்ததும் அவர்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அவர்கள் மனதில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பாடல்களை பாடி நடனமாடினார்கள். பின்னர் ஒருவருக்கொருவர் பூக்களை தூவி ஆரத்தழுவி கொண்டனர். தொடர்ந்து 2 குடும்பத்தினரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டு நீண்ட நேரம் உரையாடினார்கள். 75 ஆண்டுகள் கழித்து சமூகவலைதளம் அவர்களை ஒன்றாக இணைத்து இருக்கிறது. பின்னர்2 குடும்பத்தினரும் சேர்ந்து அரியானாவில் உள்ள மூதாதையர் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.