தமிழ்நாட்டில் ஒத்துழைப்பு கிடைத்தால் கோவில்கள் கட்டப்படும்- திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி பேட்டி!!
திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் கட்டண சேவை டிக்கெட் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் முன்னுரிமை தரிசன டிக்கெட் உட்பட அனைத்து டிக்கெட்டுகளையும் இனிமேல் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய பக்தர்கள் இனிமேல் வாக்காளர் அடையாள அட்டை டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது.
மலையேறி நேர்த்தி கடன் செலுத்தி சாமி தரிசிப்பவர்களில், சுமார் 60 சதவீதம் பேர் ஏற்கனவே விஐபி பிரேக், தர்ம தரிசன டோக்கன், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் அல்லது, ஏதாவது ஒரு ஆர்ஜித சேவா டிக்கெட் போன்றவற்றை முன் கூட்டியே கொண்டு வருகின்றனர். இவர்களில் வெறும் 40 சதவீதம் பேர்தான் எவ்வித டிக்கெட்டுகளும் இல்லாமல் மலையேறி திருமலைக்கு வருகின்றனர். ஆதலால், எவ்வித டிக்கெட்டுகளும் இல்லாமல் வருவோருக்கு மட்டும் திவ்ய தரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். அதற்காக புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்படுகிறது. கடந்த மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
ரூ. 144 கோடியே 29 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் ஸ்ரீவாணி அறக்கட்டளை சார்பில் பின்தங்கிய பகுதிகள், மீனவ கிராமங்கள் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 3000 கோவில்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில அறநிலையத்துறை பஞ்சாயத்து ராஜ் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கோவில்கள் கட்டப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் இதுபோல் தேவையான ஒத்துழைப்பு கிடைத்தால் அங்கும் கோவில்கள் கட்டப்படும். தற்போது தமிழ்நாட்டில் 3 கோவில்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.