ரெயில் நிலையங்களில் அலைமோதிய வடமாநில தொழிலாளர்கள்: கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு சென்றனர்!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல் வடமாநிலங்களான டெல்லி, பீகார், மேற்குவங்கம், உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பரவலுக்கு பின்னர் கடந்த ஆண்டுதான் ஹோலி பண்டிகையை வடமாநில மக்கள் கொண்டாடினர். இந்தநிலையில், வருகிற 8-ந்தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல முன்னேற்பாடுகளை தயார்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக, வருகிற 7-ந்தேதி சோட்டி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும். அன்றைய தினம் பூஜை பொருட்கள், மரக்கட்டைகளை கொண்டு தீ மூட்டும் நிகழ்வு நடத்தப்படும். இதில் மக்கள் பங்கேற்று சிறப்பு பூஜைகளை செய்வார்கள். இதேபோல, மேளதாளம் முழங்க மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது போன்ற வீடியோ வெளியானது. இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், கடந்த 3-ந்தேதி திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வடமாநில மக்கள் ரெயில்கள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் ஆய்வு செய்ததில் அந்த வீடியோ உண்மைக்கு புறம்பானது என்று கண்டறியப்பட்டது. இதுகுறித்து வதந்தி பரப்பிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், அமைதியை சீர்குலைக்கும் வகையில் இதுபோன்ற போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வடமாநில மக்கள் ரெயில்கள் மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் நேற்று காலை முதல் சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் வடமாநில மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தங்களின் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மூட்டைமுடிச்சுகளுடன் ரெயில் நிலையங்களில் காத்திருந்து ரெயில்களில் புறப்பட்டு சென்றனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டு இருந்தனர். இதுகுறித்து, பீகார் மாநிலம் பக்சாராவை சேர்ந்த அக்கீம் குமார் என்ற பயணி கூறுகையில், ‘நான் சென்னை பூந்தமல்லி காய்கறி மார்க்கெட்டில் 9 வருடமாக வேலை செய்து வருகிறேன். பீகாரை சேர்ந்த ஒருவரை அடிப்பது போன்ற வீடியோ எனக்கும் வந்தது. அந்த வீடியோ பற்றி எனக்கு எந்த பயமும் இல்லை. ஏனென்றால் தமிழகத்தில் நான் பாதுகாப்பாகவே இருக்கிறேன். இந்த வீடியோவை பார்த்த என்னுடைய அப்பா, அம்மா பயந்துபோய் என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார்கள். நான் எவ்வளவு எடுத்துச்சொல்லியும் அவர்கள் பயப்படுகிறார்கள். ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னைக்கு தான் வருவேன்’ என்றார்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த அர்சத் அலி, ‘ஹோலி பண்டிகையை கொண்டாடவே சொந்த ஊருக்கு செல்கிறேன். நான் தூத்துக்குடியில் கடந்த 3 வருடமாக வேலை செய்து வருகிறேன். எனக்கு இதுவரையில் எந்த பிரச்சினையும் வந்ததில்லை. எல்லோரும் என்னுடைய அண்ணன், தம்பி போலவே பழகுகிறார்கள். ஒரு மாதம் ஊரில் இருந்துவிட்டு மீண்டும் இங்கு வருவேன். ஹோலி பண்டிகைக்கு முன்பாக இது எப்போதும் இருக்கும் கூட்டம் தான்’ என்றார். சென்னையை அடுத்த தாம்பரம் ரெயில் நிலையத்தில் நேற்று ஒரே நேரத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் அதிவீரபாண்டியன், உதவி கமிஷனர் சீனிவாசன், தாம்பரம் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் மற்றும் போலீசார் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு சென்று அங்கு திரண்டிருந்த வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ” வருகிற 8-ந் ஹோலி பண்டிக்கையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்கிறோம். பண்டிகை முடிந்த பின்னர் மீண்டும் பணிக்கு வருவோம்” என்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஜார்கண்ட் நோக்கி சென்ற ரெயிலில் ஏறி புறப்பட்டு சென்றனர்.