பாகிஸ்தான்: மகளிர் தின பேரணியை தடை செய்த லாகூர் அதிகாரிகள்!!
பாகிஸ்தானில் 2018ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான உரிமைகள் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், முக்கிய நகரங்களில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மகளிர் தினத்தையொட்டி பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பேரணி நடத்துவதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். பேரணியில் பங்கேற்கும் பெண்கள் ஏந்தி செல்லக்கூடிய பதாகைகள் மற்றும் பேனர்கள் சர்ச்சைகளையும், பாதுகாப்பு சிக்கலையும் ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தன்று பாகிஸ்தானில் இரண்டு வெவ்வேறு குழுக்களால் பேரணிகள் நடத்தப்படும். பெண் உரிமைகளுக்காக பெண் உரிமை ஆர்வலர்கள் பேரணி நடத்துவார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதக்குழுக்கள் ஹயா என்ற பெயரில் எதிர்ப்பு பேரிணியை நடத்தும். இந்த ஆண்டு பெண் உரிமைக்கான பேரணியை லூகூர் அதிகாரிகள் தடை செய்துள்ளனர். இது தங்களின் உரிமைகளை மறுக்கும் செயல் என்று மகளிர் தின பேரணியின் ஒருங்கிணைப்பாளர் கூறி உள்ளார். அதேசமயம், மகளிர் தின எதிர்ப்பு பேரணிகளுக்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை.