விஷம் கொடுக்கப்பட்ட சம்பவத்துக்கு பிறகு பள்ளி மாணவிகள் மீது விஷவாயு செலுத்தப்பட்டதா?- ஈரானில் மீண்டும் பரபரப்பு!!!
ஈரானில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று கல்வி கற்பதை தடுக்க அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோம் நகரில் அதிகளவில் சிறுமிகளுக்கு சிலர் விஷம் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இச்சம்பவத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது. பெண்கள் கல்வி கற்பதை தடுப்பதற்காக சிலர் இது போன்று செய்து வருகிறார்கள் என்றும் பெண்களுக்கான பள்ளிகளை மூட வலியுறுத்தி சிலர் செயல்படுவதாகவும் தெரிவித்தது. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
நேற்று தலைநகர் தெக்ரான் உள்ளிட்ட நகரங்களில் மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பள்ளி மாணவிகள் மீது விஷவாயு செலுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. ஹமேடன், ஜான்ஜன், மேற்கு அஜர்பை ஜான், பார்ஸ், அல்போர்ஸ் மாகாணங்களில் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரசனைகளால் ஏராளமான மாணவிகள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் பள்ளிகள் மீது ரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் ஈரானில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் 10 மாகாணங்களில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள மாணவிகள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை பல நகரங்களில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையேதான் பெண்கள் பள்ளிகள் மீது ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி கூறும்போது, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதி திட்டம் இதுவாகும். இதன் மூலம் நமது அதிகாரிகள், பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றார்.