ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் ஓட ஓட விரட்டுவோம் – ஜெலன்ஸ்கி பகிரங்கம்..!
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா போரானது, ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல எல்லை மீறல்களை ரஷ்யா செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
ஆனால், இதனை ரஷ்யா மறுத்து வருகிறது. உக்ரைனின் அணு ஆயுத பகுதிகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடக்கிறது என கூறியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரியில் போரின் தொடக்கத்தின்போது உக்ரைனின் கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றிய பின்னர், மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் தொடக்கம் வரையிலான 8 மாதங்களாக அந்நகரை தனது கட்டுப்பாட்டில் ரஷ்யா வைத்திருந்தது.
அப்போது, கெர்சன் நகரில் சித்ரவதை முகாம்களை ரஷ்யா அமைத்து உள்ளது என கூறப்படுகிறது. உக்ரைன் மற்றும் உக்ரைனுடன் தொடர்பில் உள்ளவர்கள் அந்த முகாம்களில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் அடைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று கெர்சனில் 20 சித்ரவதை அறைகள் காணப்பட்டுள்ளன.
ரஷ்யா படைகள் இவற்றை நிறுவி, நிர்வாகம் செய்து, முகாம்களை அமைக்க நிதியுதவியும் செய்த விவரங்கள் இங்கிலாந்து வழக்கறிஞர் வெய்னே ஜோர்டாஷ் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதன்படி, உயிர் தப்பிய ஆயிரம் பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் மேற்கூறிய பல விவரங்கள் தெரிய வந்துள்ளன.
உக்ரைனில் சித்ரவதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், அடித்து, துன்புறுத்தியும், மின்சாரம் பாய்ச்சி அதிர்ச்சி ஏற்படுத்தும் பல கொடுமைகள் நடந்துள்ளன.
ரஷ்யா ஆதரவு கோஷங்கள், கவிதைகள் மற்றும் பாடல்ளை கற்று, அவற்றை உச்சரிக்க கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த முகாம்களில் உள்ள 400 பேரை காணவில்லை.
அவர்கள் உயிரிழந்து விட்டனரா? அல்லது ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டனரா? என்பதும் தெளிவாக தெரியவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜ்ஜியா நகரில் மக்கள் வசிக்க கூடிய, 5 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் மீது நடந்த ரஷ்யா ஏவுகணை தாக்குதலால் அந்த கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உள்ளது. தாக்குதலுக்குள்ளான பெண் ஒருவரின் உடலை உக்ரைனின் அவசரகால குழுவினர் மீட்டனர்.
இந்த ஏவுகணை வீச்சில் குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த எஸ்-300 ரக ஏவுகணை, அந்த கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியள்ளது என உக்ரைனின் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “எங்களது மக்களுக்கு ஒவ்வொரு நாளையும் பயங்கர நாளாக மாற்றுவதற்கு அந்த பயங்கரவாத நாடு விரும்புகிறது.
ஆனால், எங்களது நிலத்தில் தீங்கு செய்பவர்கள் ஆட்சி செய்ய முடியாது. ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் நாங்கள் ஓட ஓட விரட்டுவோம். ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கும் அவர்களே முழு அளவில் பொறுப்பாவார்கள்.” என்று கூறியுள்ளார்.