;
Athirady Tamil News

வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்-அமைச்சர் நமச்சிவாயம் பெருமிதம்!!

0

மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அனைத்து கிராமங்களிலும் வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் திட்ட தொடக்கவிழா நடந்தது. கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கும் வாகனத்தை கொடியசைத்து திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: தனியார் நிறுவனம் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து குருமாம்பேட்டில் உள்ள குப்பை கிடங்கு கொண்டுசெல்லும். இத்திட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்துக்கும் வண்டியை அனுப்ப வேண்டும். முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது. காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவது, பள்ளிகளுக்கு தேவையான வசதியை செய்து தருவது, தொழில் முனைவோர் எளிதாக தொழில் தொடங்க சூழ்நிலை உருவாக்குவது என பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. பல ஆண்டு காத்திருந்த 16 ஆயிரத்து 800 முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை முதல்-அமைச்சர் பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், சிறப்பு அழைப்பாளர் வீரராகவன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.