;
Athirady Tamil News

சிசோடியா கைதுக்கு கண்டனம்: பிரதமர் மோடிக்கு 9 எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் !!

0

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. சமீபத்தில் கைது செய்தது. அவரது சி.பி.ஐ. காவலை மேலும் 2 நாட்கள் நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் மணீஷ் சிசோடியா கைதுக்கு கண்டனம் தெரிவித்தும், விசாரணை அமைப்புக்களை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியும் 9 எதிர்கட்சி தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங்மான், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே (சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே கட்சி) ஆகிய 9 எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்.

9 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கூட்டாக அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. ஜனநாயகம் என்பதில் இருந்து எதேச்சதிகாரத்துக்கு மாறிவிட்டோம் என்பதை காட்டுவதாக தோன்றுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நமது ஜனநாயகத்துக்கு இது நல்லதல்ல. டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றது. இது அரசியல் சதி திட்டமாகும். அவரது கைது நாடு முழுவதும் மக்களை கொதிப்படைய செய்துள்ளது. டெல்லியின் பள்ளி கல்வியை மாற்றி அமைத்ததற்காக சிசோடியா உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார். அவரது கைது உலககெங்கிலும் ஒரு அரசியல் சூனிய வேட்டைக்கு உதாரணமாக குறிப்பிடப்படும். உலகம் இதை சந்தேகிக்கும்.

சர்வாதிகார பாஜக ஆட்சியின் கீழ் இந்தியாவின் ஜனநாயக மாண்புகள் அச்சுறுத்தப்படுகின்றன. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்தபிறகு அவர்கள் மீது வழக்கு விசாரணை தலைகீழாக நடக்கின்றன. அதிலும் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சுவேந்து அதிகாரி, முகுல்ராய் ஆகியோரை உதாரணமாக சொல்லலாம். 2014ம் ஆண்டு முதல் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனைகள், வழக்குகள் மற்றும் கைதுகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. லல்லு பிரசாத் யாதவ் (ராஷ்டிரிய ஜனதாதளம்), சஞ்சய் ராவத் (சிவசேனா) ஆசம்கான் (சமாஜ்வாடி), நவாப் மாலிக், சுனில் தேஷ்முக் (தேசியவாத காங்கிரஸ்), அபிஷேக் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் மீதான விசாரணை களை சொல்லலாம்.

இதில், மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. மத்திய அரசின் ஆதரவாக விசாரணை அமைப்புகள் உள்ளன. சர்வதேச நிதி ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மோசடி அம்பலமாகி உள்ளது. இதனால் ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி. ஆகியவை தங்கள் பங்குகளின் சந்தை மூலதனத்தில் ரூ.78,000 கோடிக்கு மேல் இழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மீது கவர்னர்களின் தலையீடு காணப்படுகிறது. தமிழ்நாடு, மராட்டியம், மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் கவர்னர்கள் அரசியல் அமைப்பு விதிகளை மீறுகிறார்கள். மாநிலத்தின் நிர்வாகத்துக்கு அடிக்கடி இடையூறு விளைவிக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.