மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி லாட்டரி கடைக்கு தீ வைத்த வாலிபர்- முகநூலில் வீடியோ வைரலானதால் பரபரப்பு!!
லாட்டரி சீட்டு சிலருக்கு பரிசினை கொடுத்தாலும் பலருக்கு துன்பத்தையே கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பலரும் தெரிவித்தனர். குறிப்பாக ஏழை மக்கள் பலரும் லாட்டரி சீட்டு வாங்கி பணத்தை மட்டுமல்ல… உயிரையும் இழந்தனர். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இந்த லாட்டரி சீட்டுகள் திருட்டுத்தனமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு வருகிறது. அதனை போலீசார் சோதனை நடத்தி தடுத்து வருகிறார்கள். இந்த சூழலில் கேரளாவிலும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் ஒருவர் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று லாட்டரி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சீட்டுகளுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர் பெயர் ராஜேஷ். கேரள மாநிலம் திருப்புணித்துரா பகுதியைச் சேர்ந்த இவர், லாட்டரி சீட்டுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனை விற்கும் வியாபாரிகள் செல்வச் செழிப்புடன் இருப்பதாகவும் கூறி முகநூலில் வீடியோ வெளியிட்டார்.
அந்த வீடியோவில், லாட்டரி விற்பனையை தடுக்க வலியுறுத்தி லாட்டரி சீட்டுகளை பெட்ரோல் ஊற்றி எரிக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ராஜேஷ், தான் கூறியபடி அந்தப் பகுதியில் உள்ள லாட்டரி கடைக்கு கையில் பாட்டிலுடன் சென்றார். கடையின் முன்பு நின்று லாட்டரி சீட்டுக்கு எதிராக கோஷமிட்ட அவர், திடீரென தான் கையில் வைத்திருந்த பாட்டிலை திறந்து, விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த லாட்டரி சீட்டுகளின் மீது ஊற்றினார். பின்னர் தீயை பற்ற வைக்க, லாட்டரி சீட்டுகள் குபீரென பற்றி எரிந்தது.
அப்போது தான் அவர் பாட்டிலில் கொண்டு வந்து ஊற்றியது பெட்ரோல் என அனைவரும் அறிந்தனர். தீ அனைத்து சீட்டுகளுக்கும் பரவி எரிய, அங்கு லாட்டரி வாங்க வந்த பலரும் அலறியடித்து ஓடினர். கடையில் இருந்தவர்கள் தீயை அணைக்க போராடினர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. அனைத்து லாட்டரி சீட்டுகளும் எரிந்து நாசமாயின. இந்த சம்பவமும் முகநூலில் வைரலாக, கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.