அதிகரிக்கும் எரிபொருள் நெருக்கடி – கலந்துரையாடல் தொடர்பில் புதிய தீர்மானம்..!
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் எதிர்நோக்கும் எரிபொருள் கோட்டா பிரச்சினைகள் தொடர்பில் நாளை (06) மேல் மாகாண ஆளுநருடன் கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பிலான விடயங்கள் குறித்து அங்கு கலந்துரையாட உள்ளதாக அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை,கடந்த வருடம் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் இணையத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டி பதிவு திட்டத்தின் கீழ் சுமார் 30,000 முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும் 120 முச்சக்கரவண்டிகள் மாத்திரமே பதிவு தொடர்பான ஆவணங்களை பூர்த்தி செய்து கட்டணம் செலுத்தி உரிய முறையில் பதிவைப் பெற்றுள்ளதாக மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் சுமார் 03 இலட்சம் முச்சக்கரவண்டிகள் இருப்பதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை,கடந்த இரண்டு வாரங்களில் திருடப்பட்ட வாகனங்கள் தொடர்பில் 68 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது.