கிளிநொச்சியில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் !!
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, கரைச்சி, இயக்கச்சி, பளை, உருத்திரபுரம் மற்றும் நீவில் ஆகிய பகுதிகளிலுள்ள கால்நடைகளுக்கு பெரியம்மை நோயின் தாக்கம் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக இளம் வயதுடைய கன்றுகள் இவ்வாறு அதிக நோய் தாக்கத்துக்கு உள்ளாகி வருவதாக கால்நடைப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கால்நடைகளின் உடலில் பாரிய கொப்பளங்கள் ஏற்பட்டு அவை பெரும் புண்ணாக மாறுவதுடன் இதனால் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலை காணப்படுவதாகவும் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதுடன் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது ஒரு வைரஸ் நோயின் தாக்கமாகும். குறிப்பாக நுளம்பு, ஈ மற்றும் உண்ணிகள் மூலம் இந்த நோய் இலகுவில் பரவக் கூடியதாகும்.
2020ஆம் ஆண்டில் இந்நோயின் தாக்கம் ஏற்பட்டு பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் இந்நோயின் தாக்கம் மிக வேகமாக பரவி வருவதாக அறிய முடிகின்றது.