பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: இந்தியாவின் சிறப்பான வளர்ச்சிக்கு பாராட்டு!!
அமெரிக்காவில் இருந்து ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பில்கேட்சை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். முக்கியமான விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினேன். சிறப்பானதும், நீடித்து நிலைத்து நிற்கக்கூடியதுமான கிரகத்தை உருவாக்குவதற்கான அவரது பணிவும், ஆர்வமும் தெளிவாகத் தெரிகிறது” என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியுடனான தனது சந்திப்பு குறித்து பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதி இருப்பதாவது:- உலகம் எண்ணற்ற சவால்களைச் சந்திக்கும்போது, ஆற்றல் மிக்கதும், ஆக்கப்பூர்வமானதுமான இடமான இந்தியாவுக்கு வந்திருப்பது உத்வேகம் அளிக்கிறது. கொரோனா பெருந்தொற்றால் கடந்த 3 ஆண்டுகளாக நான் பெரிதான அளவில் பயணங்கள் மேற்கொள்ளவில்லை. இருந்தபோதும், பிரதமர் மோடியுடன் கொரோனா தடுப்பூசி உருவாக்கம் பற்றியும், இந்தியாவில் சுகாதாரத்துறையில் முதலீடுகள் செய்வது குறித்தும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தேன். இந்தியா உயிர்காக்கும் சாதனங்களை உருவாக்குவதுடன், அவற்றை வழங்குவதிலும் சிறந்து விளங்குகிறது. அதன் பொது சுகாதார அமைப்பு 220 கோடிக்கும் மேலான தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. ‘கோவின்’ என்ற திறந்தவெளி தளத்தையும் உருவாக்கி உள்ளது. இது தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மக்கள் நேரம் ஒதுக்கிப்பெறுவதற்கும் துணை நிற்கிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு டிஜிட்டல் வடிவ சான்றிதழ்களையும் வழங்கியது. இந்த கோவின் தளம் உலகுக்கு ஒரு மாடலாகத் திகழும் என்று பிரதமர் மோடி நம்புகிறார். நானும் அதை ஒப்புக்கொள்கிறேன். இந்தியாவில் கொரோனா காலத்தில் 30 கோடி மக்களுக்கு அவசர கால டிஜிட்டல் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 20 கோடி பேர் பெண்கள் ஆவார்கள். இந்தியா நிதிச்சேர்க்கைக்கு முன்னுரிமை அளித்ததுடன், ஆதார் என்னும் டிஜிட்டல் அடையாள அமைப்பில் முதலீடு செய்ததும், டிஜிட்டல் வங்கித்துறையில் புதிய தளங்களை உருவாக்கியதும்தான் இதைச் சாத்தியமாக்கியது. இந்த ஆண்டு ‘ஜி-20’ அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது குறித்தும் பிரதமர் மோடியுடன் விவாதித்தேன்.
இங்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகள் நாட்டை எவ்வாறு வளர்ச்சி அடையச்செய்து உலகுக்கு பயன் அளிக்கிறது என்பதை காட்டுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. பிற நாடுகள் அவற்றைப் பின்பற்றவும் உதவுகிறது. பிரதமர் மோடியுடனான எனது உரையாடல், இந்தியா சுகாதாரம், வளர்ச்சி, காலநிலை மாற்றம் ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், முன் எப்போதையும் விட மிகுந்த நம்பிக்கை அளித்தது. நாம் கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்தால் என்ன சாத்தியம் என்பதையும் காட்டுகிறது.
இந்தியா இந்த முன்னேற்றத்தைத் தொடரும் என்றும், அதன் கண்டுபிடிப்புகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் என்றும் நான் நம்புகிறேன். பிரதமர் மோடி கூறியது போன்று சிறுதானிய உணவுகள் சிறப்பானவை. அவை தண்ணீர் சிக்கனமானவை, வெப்பத்தை தாங்கக்கூடியவை. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த பெண்களின் வளைகாப்பு விழாவில் நான் சிறுதானிய கிச்சடி சாப்பிட்டேன். அருமையாக இருந்தது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.