பிரான்சில் வேலை வாங்கி தருவதாக கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி!!
பிரான்சில் வேலை வாங்கி தருவதாக கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுவை லாஸ்பேட்டை நாவற்குளம் மோதிலால் நகரை சேர்ந்தவர் சண்முகம்(வயது44). கட்டிட காண்டிராக்டர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்ய ஆசைப்பட்டார். இதனை தன்னுடன் பணிபுரியும் காரைக்காலை சேர்ந்த வில்சன், சந்தோஷ்குமார் ஆகியோரிடம் சண்முகம் தெரிவித்தார். இதையடுத்து காரைக்காலை சேர்ந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ராஜகுமரன் மற்றும் அவரது மனைவி அமுதா ஆகியோர் பலரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக சண்முகத்திடம் தெரிவித்தனர்.
மேலும் ராஜகுமரன் மற்றும் அவரது மனைவி அமுதாவை சண்முகத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். அப்போது பிரான்சில் வேலைக்கு அனுப்பி வைப்பதாக சண்முகத்திடம் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தம்பதியினர் தெரிவித்தனர். அதற்காக ரூ.16 லட்சம் தரவேண்டும் என்று அவர்கள் சண்முகத்திடம் பேரம் பேசினர். அதன்படி சண்முகம் அவர்களிடம் ரூ.16 லட்சம் கொடுத்தார். அதன்பிறகு ராஜகுமரனும் அவரது மனைவி அமுதாவும் பிரான்சுக்கு சென்று விட்டனர். ஆனால் சண்முகத்துக்கு பிரான்சில் வேலைக்கு சேர்க்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் சண்முகம் அவர்களை போனில் தொடர்பு கொண்ட போது அவர்கள் போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த சண்முகம் பிரான்சில் உள்ள தனக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்தார். அப்போது பணம் பெற்ற தம்பதியினர் இதுபோன்று பலரை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சண்முகம் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பிரெஞ்சு தம்பதியினர் மீது பணம் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.