அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருந்து டிரம்ப் விலகலா?: பிரசாரத்தில் அதிரடி பதில்!!
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி நடக்கிறது. இதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், எதிர்கட்சியான குடியரசு கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பதற்கான நடைமுறைகள் தற்போதே சூடு பிடித்துள்ளன.குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக போட்டியிடுவதாக கடந்த 2022ம் ஆண்டே அறிவித்து விட்டார்.
அவரைத் தொடர்ந்து, இம்முறை இந்திய வம்சாவளியினர்களான நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி ஆகியோரும் களமிறங்கி உள்ளனர்.இந்நிலையில், மேரிலாண்ட் மாகாணத்தின் ஆக்ஸன் ஹில் பகுதியில் நடந்த வருடாந்திர கன்சர்வேட்டிவ் மாநாட்டில் நேற்று முன்தினம் உரையாற்றிய டிரம்ப், ‘‘எதை நாம் தொடங்கினோமோ அதை முடிக்கப் போகிறோம். இந்த போட்டியில் மகத்தான வெற்றியை எட்டப் போகிறோம். வெள்ளை மாளிகையை கட்டியெழுப்பக் கூடிய ஒரே தகுதியான குடியரசு கட்சி வேட்பாளர் நானே’’ என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அவர் மீதான வழக்குகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதற்காக எல்லாம் நான் போட்டியிலிருந்து வெளியேற மாட்டேன். வேட்பாளர் போட்டியிலிருந்து நிச்சயமாக, நான் வெளியேறுவது பற்றி யோசிக்கவே மாட்டேன்’’ என்றார்.
* டிரம்ப் மீது நிக்கி தாக்குமியாமியில் நடந்த மற்றொரு கூட்டத்தில் பேசிய நிக்கி ஹாலே, ‘‘நாட்டின் தற்போதைய கடன் ரூ.2,542 லட்சம் கோடியாக உள்ளது. இதில் 10 ஆண்டில் குடியரசு கட்சியை சேர்ந்த 2 அதிபர்கள் (ஜார்ஜ் புஷ், டிரம்ப் பெயரை கூறவில்லை) மட்டுமே நாட்டின் கடனை ரூ.820 லட்சம் கோடியை அதிகரித்துள்ளனர். தற்போதைய அதிபர் பைடனை 10 ஆண்டு ஆட்சி செய்ய விட்டால், இன்னும் ரூ.1,600 லட்சம் கோடியை அதிகரிக்க செய்து விடுவார். வரி செலுத்தும் மக்கள் பணத்தை செலவழிப்பதில் இவர்களைப் போன்றவர்கள் ஆர்வமாக உள்ளனர்’’ என டிரம்ப்பை தாக்கி பேசினார்.