சர்வதேச நீர் எல்லையில் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க உலக நாடுகள் ஒப்பந்தம்!!
சர்வதேச கடல் பகுதியில் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க உலக நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.கடல்சார் குறித்த ஐநா.வின் விதிகள் கடந்த 1994ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. சர்வதேச நீர் எல்லையில், அதாவது எந்த நாட்டின் அதிகார எல்லைக்கும் உட்படாத கடல் பகுதியில், கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பாக ஐநா.வில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச கடல் பகுதி எந்த நாட்டின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வராததால், வர்த்தக மீன்பிடி, ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக்கினால் மாசடைந்து வருகிறது.
பருவநிலைகளின் போது நாட்டின் கடல் எல்லையில் இருந்து டால்பின், திமிங்கலங்கள், கடல் ஆமைகள், அரியவகை மீன்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் சர்வதேச நீர் எல்லைக்கு புலம் பெயர்கின்றன.
தற்போதைய ஐநா உறுப்பு நாடுகளின் இந்த ஒப்பந்தத்தினால் சர்வதேச கடல் பகுதியில் பாதுகாக்கப்பட்ட பகுதி உருவாக்கப்பட்டு கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்படும். இதன் மூலம், கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி, கடல்சார் தொழில் மற்றும் சுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் பாதுகாக்கப்பட உள்ளனர்.