மூன்று உலக சாதனைகளைப் படைத்த இந்திய வம்சாவளி சிறுமி! குவியும் பாராட்டுக்கள் !!
கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மமதி வினோத் என்ற 9 வயது சிறுமி வளைய நடனத்தில் மூன்று கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பிரித்தானியாவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட மமதி வினோத் மூன்று கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.
குறிப்பிட்ட நேரத்தில் வெவ்வேறு நிலைகளில் சாகச வளையத்தை வேகமாகச் சுழற்றுவதன் மூலம் இந்த சாதனையைச் சிறுமி மமதி படைத்துள்ளார்.
மமதி போட்டியில் கலந்து கொள்ளும் முன் பதட்டமாக இருந்ததாகவும், அதே நேரத்தில் தன்னம்பிக்கையோடு நடனமாடியதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து மமதியின் தாய் தெரிவிக்கையில் “மமதி மிகவும் சுறுசுறுப்பானவள், அவளால் சாகச வளையத்தை வேகமாகச் சுழற்றி கட்டுப்படுத்த முடியும். அவளுக்கு இரண்டு வயதாக இருந்தபோது 30 இன்ச் பாலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக் வளையத்தை இடுப்பு, கழுத்து, கைகள் மற்றும் கால்களில் சுற்றிச் சுழற்றுவாள்.நாங்கள் அவளது திறமையை ஊக்குவித்தோம்.அவள் கின்னஸ் சாதனை படைத்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார்.
கின்னஸ் சாதனை படைத்த பின்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மமதி “ஹூலா ஹூப்பிங் எனக்கு இயல்பாக வரும். இது ஒரு நல்ல விளையாட்டு, ஏனென்றால் அதில் ஓடுவது அல்லது உதைப்பது போன்ற எதுவும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் பிறந்த மமதி தனது 2 வயது வரை அமெரிக்காவில் வாழ்ந்துள்ளார். 5-வது வயதில் தனது பெற்றோருடன் கனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.