யூ-டியூப் வீடியோக்கள் பார்த்து குழந்தை பெற்றெடுத்த சிறுமி- பெல்ட்டால் கழுத்தை நெரித்து குழந்தையை கொலை செய்த கொடூரம்!!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி அதிகநேரம் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் தாக்கூர் என்ற வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. தாக்கூரை பற்றிய முழு விபரங்களும் கூட தெரியாத சிறுமி நீண்ட நேரம் அவருடன் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலமும், வாய்ஸ் கால் மூலமும் பேசி பழகி வந்துள்ளார். நாளடைவில் இருவரும் நெருங்கி பழகிய நிலையில் அவ்வப்போது தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது தாக்கூர் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். நாளடைவில் மாணவியின் வயிறு பெரிதாகி உள்ளது. இதுகுறித்து சிறுமியிடம் அவரது தாயார் கேட்டபோது, தனக்கு சில உடல்நல பிரச்சினைகள் இருப்பதாக கூறி சமாளித்துள்ளார்.
சிறுமியின் தாயார் ஒரு வணிகவளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றால் மாட்டிக்கொள்வோம் என கருதிய சிறுமி யூ-டியூப்பில் வீடியோக்களை பார்த்து வீட்டில் தானாகவே பிரசவம் பார்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி யூ-டியூப்பில் பிரசவம் செய்வது குறித்து வீடியோக்களை பார்த்துள்ளார். கடந்த 3-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமி யூ-டியூப்பில் வீடியோக்களை பார்த்து தானாகவே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை அழுதுள்ளது. இதனால் சத்தம் கேட்டு மாட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்த அந்த சிறுமி பெல்ட்டால் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தையின் உடலை வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.
வேலை முடிந்து வீடு திரும்பிய சிறுமியின் தாயார் வீட்டின் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் சிறுமியிடம் விசாரித்த போது தனது மாதவிடாய் காரணமாக ரத்தக்கறை ஏற்பட்டதாக கூறினார். ஆனாலும் விபரீதம் ஏதோ நடந்துள்ளது என்பதை உணர்ந்த சிறுமியின் தாயார் அவரிடம் தொடர்ந்து விசாரித்த போது நடந்த சம்பவங்களை தாயிடம் கூறி சிறுமி கதறி அழுதுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட பிறந்த குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.