ஜெகன் மோகன் ரெட்டி அரசின் அட்டூழியங்கள் வட்டியுடன் திருப்பித்தரப்படும்- சந்திரபாபு நாயுடு ஆவேசம்!!
ஆந்திர மாநிலம் மங்கள கிரியில் தெலுங்கு தேசம் வக்கீல்கள் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அந்த கட்சி தலைவரும், ஆந்திர சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் செயல்களுக்கு வக்கீல்கள் இரையாக வேண்டாம். இந்த அரசின் அட்டூழியங்கள் வட்டியுடன் திருப்பித்தரப்படும். இந்த சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வக்கீல்கள் சமூகம் கட்சியுடன் கைகோர்க்க வேண்டும். இந்த அரசைப் போன்ற சர்வாதிகார தலைமை ஆங்கிலேயர்களிடம் கூட இல்லை.
தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் அரசியல் ரவுடித்தனம் நிச்சயமாக ஒடுக்கப்படும். இந்த அரசின் பொல்லாத கொள்கைகளுக்கு எதிராக அரசியல் போருடன் சட்டப் போராட்டத்தையும் நடத்த வேண்டிய அவசியத்தை நான் உணர்கிறேன். அதிகம் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். கடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் 47 வக்கீல்களுக்கு சீட் வழங்கியது. நான் 1978ம் ஆண்டு முதல் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறேன். ஆனால் மாநிலத்தில் இதுபோன்ற சூழ்நிலையை ஒருபோதும் கண்டதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.