இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை நிறுத்திவைக்க முடியாது- நீதிமன்றம் அதிரடி!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக் இ- இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு கட்சி கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் குண்டு காயம் அடைந்த அவர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார். இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், இம்ரான் கான் பிரதமராக பதவியில் இருந்தபோது பெறப்பட்ட பரிசுகளை, குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த கைது வாரண்டுடன் லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் அப்போது அவர் வீட்டில் இல்லை. இதனால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். போலீசார் இம்ரான்கானை கைது செய்ய வருகிறார்கள் என்பதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் வீடு முன்பு திரண்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நாளை (7-ந்தேதி) அவர் கோர்ட்டில் ஆஜராவார் என அவரது வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே இம்ரான் கானின் வழக்கறிஞர்கள், இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இன்றைய விசாரணையின்போது ஆஜராகி, இம்ரான் மீதான கைது வாரண்டை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டனர். இம்ரான் கான் நீதிமன்ற உத்தரவுகளை எப்போதும் பின்பற்றுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதால் அவரை காவல்துறையால் கைது செய்ய முடியாது என்று அவரது வழக்கறிஞர் இமாம் இமாம் வாதிட்டார். ஆனால் அவர்களின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். கைது வாரண்ட் மீது இடைக்கால தடை பெறுவதற்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.