வானுயர எழும் கரும்புகை!: வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து; 3 ஆயிரம் குடிசை வீடுகள் எரிந்து நாசம்..!!
வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காக்ஸ் பஜார் முகாமில் மியான்மரில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றனர். அங்கு குடிசை வீடுகள் அதிகம் உள்ள நிலையில், திடீரென ஒரு வீட்டில் தீ பற்றி எரிந்தது. தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் தீ மளமளவென மற்ற வீடுகளுக்கும் பரவியது. இதனால் பல அடி உயரத்திற்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது; வானுயர கரும்புகை வெளியேறியது. இந்த விபத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட 3 ஆயிரம் கூடாரங்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ அணைக்கப்பட்ட நிலையில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்ததால் பொருட்சேதம் அதிகம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 35 முஸ்லிம் தேவாலயங்கள் மற்றும் அகதிகளுக்கான 21 கற்றல் நிலையங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தால் ஏராளமானோர் தங்குவதற்கு இடமின்றி திறந்தவெளியில் தங்கியுள்ளனர்.