இலங்கையில் இந்திய ரூபாவின் பயன்பாடு தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!!
நாட்டின் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் த ஹிந்து பத்திரிகை இன்று(06) செய்தி வௌியிட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை வங்கி, இந்திய அரச வங்கி மற்றும் இந்தியன் வங்கியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறியதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த நடவடிக்கைகள் மூலம் வலுவான மற்றும் நெருக்கமான கூட்டாண்மையை உருவாக்க உதவும் முன் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பரிவர்த்தனைகளுக்காக இந்திய ரூபாவை பயன்படுத்துவதன் மூலம் குறைவான பரிமாற்ற செலவு, விரைவான சேவை, வர்த்தகக் கடன்களை எளிமையாக பெறுதல் போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் கணிசமான அளவில் வருமானம் ஏற்படும் என்பதுடன் நட்புறவு மேலும் நெருக்கமாகும் எனவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.
இதேவேளை, இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.