தோள் சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்றனர்!!
தோள் சீலை போராட்டம் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. நாகர்கோவில் நாகராஜா திடலில் இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ், விஜய் வசந்த் எம்.பி. பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 2 மாநில முதல்வர்கள் பங்கேற்றதால், நாகர்கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பெண்கள் தோள் சீலை அணியும் உரிமை கடந்த 1822-ம் ஆண்டு தொடங்கிய தோள் சீலை போராட்டம் வாயிலாக கிடைத்தது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் அய்யா வைகுண்டரும், கேரளாவில் நாராயண குருவும், சீர்திருத்த கிறிஸ்தவ சமய தொண்டராக விளங்கிய சார்லஸ் மீட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.