விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் 2 பேரிடம் விசாரணை!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரும் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவியும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த 25-ந்தேதி மாலை கப்பியாம் புலியூர் ஏரிக்கரையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென காதலனை கத்தியால் வெட்டினர். இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் கத்தி முனையில் காதலன் கண் எதிரே அந்த மாணவியை 3 பேரில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் 3 பேரும் மாணவன்-மாணவியிடம் இருந்த செல்போன், வெள்ளி கொலுசு, மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்து விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் மகளிர் போலீசார் 7 பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக 8 தனிப்படை அமைத்து அதில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர்.
இந்த தனிப்படை போலீசார் ஏரிக்கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரையில் உள்ள செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். அதில் விக்கிரவாண்டி அருகே உள்ள மூங்கில்பட்டு கிராமத்தை சேர்ந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் இருந்த ஒருவரையும் பிடித்து வந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.