சென்னை விமான நிலையத்தில் சரக்கு இறக்குமதி குறைந்தது: அதிகாரிகள் தகவல்!!
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு சரக்கக முனையம், தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களின் சரக்குகளையும் கையாண்டு வருகிறது. சென்னை விமான நிலைய சரக்ககத்தில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 2 கோடியே 35 லட்சத்து 93 ஆயிரம் கிலோ சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 2 கோடியே 57 லட்சத்து 78 ஆயிரம் கிலோ சரக்குகள் கையாளப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜனவரியில் சென்னை விமான நிலைய சரக்கரகத்தில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு 21 லட்சத்து 85 ஆயிரம் கிலோ குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் உள்ள பன்னாட்டு சரக்கங்களிலும் கடந்த ஆண்டு ஜனவரியை விட இந்த ஆண்டு ஜனவரியில் சரக்குகள் கையாளப்பட்ட அளவு குறைந்துள்ளது.
கோவை விமான நிலைய பன்னாட்டு சரக்ககத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் 6.22 லட்சம் கிலோ சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் 3.40 லட்சம் கிலோ சரக்குகள் மட்டுமே கையாளப்பட்டுள்ளன. இது பற்றி சென்னை விமான நிலைய பன்னாட்டு சரக்கக அதிகாரிகள் கூறியதாவது:- சென்னை விமான நிலைய சரக்ககத்தில் ஒவ்வொரு மாதமும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது சகஜம். இந்த கையாளப்பட்ட சரக்குகளில் இறக்குமதி செய்யப்படும் சரக்குகளின் அளவு தான் குறைந்துள்ளது.
ஏற்றுமதி சரக்குகள் அதே நிலையில் தான் இருக்கிறது. தற்போது நாம் சொந்தமாக பொருட்களை பெருமளவு உற்பத்தி செய்யப்படுவதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிக்காக காத்திருக்கவில்லை. மிக முக்கியமாக 2022-ம் ஆண்டு கொரோனா 3-ம் அலை பெருமளவு தாக்கம் இருந்தது. அந்த நேரத்தில் மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு கொண்டு இருந்தன.
அதில் உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் வெளிநாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்வது மிகப்பெரும் அளவு குறைந்துவிட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜனவரியில் சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள விமான நிலைய சரக்ககங்களில் இறக்குமதி சரக்குகள் கையாளப்பட்டது குறைவுக்கு இதுதான் காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.