மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் இன்று முதல்வர் பதவியேற்பு விழா- பிரதமர் மோடி பங்கேற்பு!!
நாகாலாந்து முதல்வராக தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் தலைவர் நெய்பியு ரியோவும், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கான்ராட் சங்மாவும் இன்று முதல்வராக பதவியேற்க உள்ளனர். திரிபுராவில் பாஜக தலைமையிலான கூட்டணியில் முதல்வராக பாஜகவின் மாணிக் சாஹா, ஹோலி பண்டிகைக்கு மறுநாள் வியாழக்கிழமை பதவியேற்கிறார். இந்த வாரம் நடைபெறும் மூன்று விழாக்களிலும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்கின்றனர். மேகாலயா சட்டசபை தொகுதிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி நடந்தது. இதில் தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) தலைவர்களில் ஒருவரான மாநில முதல்வர் கன்ராட் சங்மா தெற்கு துரா தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் சங்மாவின் கட்சி 26 இடங்களைக் கைப்பற்றியது.
இதையடுத்து, மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கான்ராட் சங்மா இன்று முதல்வராக பதவி ஏற்கிறார். 60 உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டசபைத் தேர்தலில் என்டிபிபி-பாஜக கூட்டணி 37 இடங்களைக் கைப்பற்றியது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள மற்ற அனைத்து கட்சிகளும் ரியோ தலைமையிலான கூட்டணிக்கு தங்கள் ஆதரவு கடிதங்களை அளித்தன. இதையடுத்து, எதிர்க்கட்சியே இல்லாமல் 72 வயதான ரியோ இன்று முதல்வராக பதவி ஏற்கிறார்.