அமெரிக்காவில் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற வாலிபர் கைது!!
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பாஸ்டன் என்ற இடத்துக்கு அமெரிக்க ஏர் லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். விமானம் பாஸ்டனை நெருங்கும் சமயத்தில் திடீரென ஒரு பயணி எழுந்து சென்று விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான பணிப் பெண் ஒருவர் அதனை தடுக்க முயன்றார். உடனே அந்த பயணி கையில் வைத்து இருந்த உடைந்த கரண்டியால் பணிப்பெண் கழுத்தில் 3 முறை குத்தினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து மற்ற விமான பணியாளர்கள் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். அவர்களுக்கு ரகளையில் ஈடுபட்ட பயணி மிரட்டல் விடுத்தார். இருந்த போதிலும் அவரை பணியாளர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் பாஸ்டனில் விமானம் தரை இறங்கியதும் அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவரது பெயர் பிரான்சிஸ்கோ செவெரோ டோரஸ் (வயது 33)என்பதும் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அந்த வாலிபர் ஏன் இந்த செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. நல்ல வேளையாக டோரஸ் அவசர கதவை திறக்க முயன்றது தடுக்கப்பட்டதால் பெரிய அசம்பாவித சம்பவம் நிகழவில்லை.