யார் விலகினாலும் பா.ஜ.க.வின் பலம் குறையாது: அண்ணாமலை பரபரப்பு பேட்டி!!
பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார், இரு தினங்களுக்கு முன்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். நிர்மல் குமாரை தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணனும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க மதுரை வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வந்திருக்கிறேன்.
தமிழகத்தில் ஒரு காலத்தில் அரசியல் களம் திராவிட கட்சிகளில் இருந்து யாராவது வந்து பாஜகவை காப்பாற்ற மாட்டார்களா என இருந்தது. ஆனால் தற்போது சில திராவிட கட்சிகளின் வளர்ச்சிக்கு பாஜக தான் கண் முன் தெரிகிறது. பாஜக வளர்ந்து வருகிறது. தலைவர்களை உருவாக்கி கொண்டிருக்கின்றோம். பாஜகவில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவேன். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியே நான் இருப்பேன். சில முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சி அளிக்கத் தான் செய்யும். கட்சி அதிர்வுகளை சந்தித்து கொண்டு தான் இருக்கும். அரசியலில் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. இப்போது பார்த்த வினையின் எதிர்வினை இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் நடக்கலாம்.
அரசியல் கட்சி அப்படித்தான் வளர முடியும். கட்சியில் இருந்து யார் விலகினாலும், பாஜகவின் பலம் குறையாது. தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை, ஜெயலலிதா, கருணாநிதி எப்படி முடிவு எடுப்பார்களோ அதுபோல் தான் என் முடிவும் இருக்கும். தமிழகத்தில் என்னை போன்று தாக்கப்பட்ட தலைவர்கள் இல்லை. பா.ஜ.க.வை தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர்த்துவதே என் நோக்கம். தமிழக அரசியலில் புதிய மாற்றம் தேவை, அதை பாஜக கொண்டு வரும். இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. தனித்து போட்டியிட நேரம் வரும்போது அது பற்றி அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை முன்னிலையில், அதிமுகவைச் சேர்ந்த சுமார் 50 பேர் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.