அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கூட்டமைப்பு“ஆசிய நேட்டோ’’வாக செயல்படுகிறது: சீனா கடும் தாக்கு!!
“அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கூட்டமைப்பு ஆசியாவின் நேட்டோவாக பயன்படுத்தப்படுகிறது’’ என்று சீன வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். சீனாவில் நடந்த ஆண்டு பத்திரிகையாளர் மாநாட்டில் பங்கேற்று பேசிய சீன வெளியுறவு அமைச்சர் கீன் கேங், “அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் உத்தியானது, இப்பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க அமைக்கப்பட்ட சுதந்திரமான, வெளிப்படையான அமைப்பு அல்ல. மாறாக, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் விநியோக சங்கிலியை துண்டிக்க தனிப்பட்ட அமைப்பை உருவாக்கும் அமெரிக்காவின் ஒருங்கிணைந்த முயற்சியாகும்.
இந்தோ-பசிபிக் கூட்டமைப்பை அமெரிக்கா ஆசியாவின் நேட்டோ அமைப்பாக பயன்படுத்த முயற்சிக்கிறது,’’ என்று குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்காவின் இந்தோ-பசிபிக், குவாட், ஆக்கஸ் உள்ளிட்ட கூட்டமைப்புகள் இந்த பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சியை தடுக்க உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் அமைப்புகளாகும். இதனால் மீண்டும் ஒரு பனிப்போர் ஏற்படக் கூடாது. உக்ரைன்-ரஷ்யா போரை போன்றதொரு போர் ஆசியாவில் உருவாகி விடக் கூடாது,’’ என்று கூறினார்.