சர்வதேச மகளிர் தினம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து!!
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:- பெண்களின் உயர்வினை உறுதிபடுத்தும் வகையிலும் அதை, உலகிற்கு பறை சாற்றும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்து நிலைகளிலும் மகளிர் சம உரிமையும், வாய்ப்பும் பெற்று சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ வழிவகுக்கும் வகையில் புதுவை அரசு மகத்தான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும், அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் முன்னோடி மாநிலமாக புதுவை திகழ்கிறது. பெண்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் முத்திரைத்தாள் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படுகிறது. முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், முதிர் கன்னிகளின் நலனை பேணும் வகையில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப தலைவிகளின் பொருளாதாரத்தை உறுதி செய்யும் வகையில் புதுவை அரசு மாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கும் முன்னோடிதிட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
பாகுபாடு, சமத்துவம் இடையே உள்ள வேறுபாடுகளை எதிர்கொண்டு ஒவ்வொரு துறை யிலும் முன்னேறி, உலகிற்கே மேன்மையளிக்கும் சக்தியாக திகழ்ந்துவரும் மகளிர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மகளிர் தின வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் சிவா: பெண்களுக்கான திட்டங்கள் முன்னெடுக்கும் அரசு புதுவையில் அமைய வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் பெண்கள் சம வாய்ப்பு பெற்று, சுயமாக வாழ வேண்டும் என்று கூறி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க. செயலளார் அன்பழகன்: ஒரு குடும்பத்தில் பாசமுள்ள தாய் என்பவர் அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களால் தெய்வமாக மதிக்கப்படுவார்.
பல்வேறு பெருமைகளுக்கு சொந்தமான பெண்களை பாராட்டும் வகையில் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மகளிர் தின விழாவில் ஒட்டுமொத்த பெண் இனத்தையும் போற்றுவோம். ஒம்சக்தி சேகர்: உலகத்தில் உள்ள மகளிர் அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கிய ஜெயலலிதா தமிழகத்தை ஆட்சி செய்த போது மகளிர் வாழ்வு மேம்பட பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்தினார்.
அதுபோல் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக மகளிர்க்கு மாதம்ரூ.1000 வழங்கும் திட்டத்தை புதுவையில் செயல்படுத்தி வருவதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துக்களோடு மகளிர் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வையாபுரி மணிகண்டன்: சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும், புதுவை மாநிலத்தை சேர்ந்த என் அன்பு சகோதரிகள், தாய்மார்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். பா.ஜனதா சாமிநாதன்: இந்த நாளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிந்து, பெண்கள் பாதுகாப்புடனும், தைரியமுடனும் திகழ என் மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.