வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு எதிரான புதிய சட்டத்திற்கு ஜார்ஜியாவில் வெடித்த போராட்டம்..!!
ஜார்ஜியாவில் தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவது தொடர்பான புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜார்ஜியாவில் புதிய சட்டம் ஒன்று கொண்ட வரப்படவுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து 20% அதிகமாக நிதி பெற்றால் அந்த நிறுவனங்கள் வெளிநாட்டு ஏஜென்ட் என்று பதிவு செய்ய வேண்டும். இதே போன்ற சட்டத்தை ஏற்கனவே கொண்டு வந்த ரஷ்யா அதனை பயன்படுத்தி எதிர் கருத்து உள்ளவர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், புதிய சட்டத்திற்கு ஜார்ஜியாவில் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்நாட்டு தலைநகர் டீபீலிசியில் நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போராட்டகாரர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதால் அங்கு வன்முறை வெடித்தது. இந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜார்ஜியா இணைவதில் சிக்கல் ஏற்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் போது பெண் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியை ஏந்தியபடி முழக்கமிட்டார். அவர் மீது போலீசார் தண்ணீரை பீச்சியடித்தபோது மற்ற போராட்டக்காரர்கள் அப்பெண்ணுக்கு அரணாக நின்றனர்.