சீனா: ராணுவத்துடன் பட்ஜெட் செலவினத்தை விவாதிக்கும் அரசு – அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள் குறித்தும் எச்சரிக்கை!!
சீனாவில் அதன் நாடாளுமன்றம் தேசிய மக்கள் காங்கிரஸ்(என்பிசி) என அழைக்கப்படுகிறது. அது ஆளும் அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் தெரிவிக்கும் பெயரளவுக்கான அமைப்பு போல இயங்குகிறது. அதன் கூட்டத்திலேயே ராணுவ செலவு அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. சீன நாடாளுமன்றம், ஷி ஜின்பிங்கை மூன்றாவது முறையாக அதிபர் ஆக இன்னும் உறுதிப்படுத்த உள்ளது.
சீன ராணுவத்தின் வரவு செலவுத் திட்டம் – சுமார் 225 பில்லியன் டாலர்களில் இருந்து தொடங்குகிறது. இதை விட அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட் நான்கு மடங்கு அதிகமாகும்.
ஆனால், பாதுகாப்புக்காக செலவழிக்கப்படும் தொகையின் விவரத்தை சீனா குறைத்து மதிப்பிட்டு வெளியிடுவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில், சீனாவின் பாதுகாப்புக்கான பட்ஜெட், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 10% உயர்ந்துள்ளது, 2014இல் இது அதிகபட்சமாக 12.2% ஆக அதிகரித்துள்ளது.
பிரதமர் பதவிக்காலம் நிறைவடையவிருக்கும் லீ கெச்சியாங், தமது அறிக்கையில், “சீனாவை அடக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான வெளி முயற்சிகள் அதிகரித்து வருகின்றன” என்று எழுதியுள்ளார்..
“ஆயுத படைகள் ராணுவப் பயிற்சி மற்றும் ஆயத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்..
சீனாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு இந்த ஆண்டு சுமார் 5% அளவுக்கு குறைய வாய்ப்புள்ளதாகவும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
சீன நாடாளுமன்றத்தின் இரு அமர்வுகள், ஆண்டுதோறும் நடக்கும் வழக்கமான விவகாரம்தான்.
ஆனால் இந்த ஆண்டு நடக்கும் இரு அமர்வுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை, காரணம், இதில் பங்கேற்கும் பிரதிநிதிகள் கம்யூனிஸ்ட் கட்சியின் பல பல முக்கிய அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகளை மறுவடிவமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த வார தேசிய மக்கள் காங்கிரஸ், சீனாவின் அதிபராகவும்,ராணுவத்தின் தலைமை தளபதியாகவும் ஷி ஜின்பிங்கை முறைப்படி மீண்டும் அறிவிக்கவுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, ஷி ஜின்பிங்கை மூன்றாவது முறையாகத் அதன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுத்தபோது, சீன அதிகாரத்துவ அமைப்பில் தனக்கான இடத்தை அவர் பாதுகாத்துக் கொண்டதாக நம்பப்பட்டது.
யுக்ரேன் போர் மற்றும் அமெரிக்க வான்பரப்பில் சீனாவின் உளவு பலூன் பறந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் மோசமடைந்து வரும் உறவுகளுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடனான உறவை தீவிரமாகப் பேணும் வேளையில், சீனாவின் ராணுவ செலவினங்களின் அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது..
இனி வரும் ஆண்டுகளில் தைவான் மீதான படையெடுப்பை சீனா முன்னெடுக்கக் கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் பலமுறை எச்சரித்துள்ளனர். தைவானைச் சுற்றியுள்ள வான் மற்றும் கடல்களில், பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசுவது உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம், சீனா தொடர்ந்து அதன் வளர்ந்து வரும் ராணுவ சக்தியைக் காட்டி வருகிறது..
சுயாதீன ஆளுகை நடைபெற்று வரும் தைவானை தன்னிடம் இருந்து பிரிந்த மாகாணமாக சீன பார்க்கிறது, அது கடைசியில் தமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதி என்றே சீனா கருதுகிறது.
தேசிய மக்கள் காங்கிரஸில் புதிய பிரதமரின் பெயரும் வெளியிடப்படும். சீனாவிஸ் அதன் பொருளாதாரம் மற்றும் நிர்வாக விவகாரங்களை மேற்பார்வையிடும் அதிகாரம் அதன் பிரதமர் வசம் இருக்கும்.
பெய்ஜிங்கில் நடைபெறும் இரண்டு அமர்வுகள், சீனாவின் நாடாளுமன்றம் மற்றும் உயர்நிலை அரசியல் ஆலோசனை குழுவின் வருடாந்திர கூட்டங்கள் ஆகும். இதில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
தேசிய மக்கள் காங்கிரஸானது நாட்டின் நாடாளுமன்றத்துக்கு இணையானதாகும். கோட்பாட்டளவில் இதுவே மிகவும் சக்திவாய்ந்த நாட்டின் உச்சபட்ச அமைப்பாகும். யதார்த்தத்தில் இது ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ‘ரப்பர் ஸ்டாம்ப்’ அமைப்பாகச் செயல்படுகிறது, ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகள், இங்கே முக்கிய சட்டங்களாக இயற்றப்படுகின்றன.
சீன மக்கள் அரசியல் ஆலோசனை குழுவுக்கு அடிப்படையில் சட்டமியற்றும் அதிகாரம் கிடையாது. சமூகத்தின் பல்வேறு துறைகளில் இருந்து அதற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். அதே சமயம், அந்த உறுப்பினர்கள் நடத்தும் விவாதங்கள், வளர்ந்து வரும் சமூகம் மற்றும் பொருளாதார பிரச்னைகள் தொடர்பானவையாக இருக்கும் என்பதால் அவை கவனிக்கத்தக்கவை ஆக இருக்கும்.