ட்விட்டர் பயனர்களுக்கு இனி பாதுகாப்பு கிடைக்காது – பிபிசி புலனாய்வில் அதிர்ச்சி தகவல்!!
ஈலோன் மஸ்க் தலைமையில் ட்விட்டரில் நடந்த பணிநீக்கங்கள், மாற்றங்களைத் தொடர்ந்து, ட்விட்டர் தளத்தில் நடக்கும் ட்ரோலிங், தவறான தகவல் பரவுவது, குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் ஆகியவற்றில் இருந்து பயனர்களை இனி அந்த நிறுவனத்தால் பாதுகாக்க முடியாது என்று ட்விட்டர் நிறுவன ஊழியர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
ஈலோன் மஸ்க் தலைமையின் கீழே வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாக, ட்ரோல்கள் தூண்டப்படுவதாக, துன்புறுத்தல்கள் தீவிரமடைவதாக, பெண்கள் மீதான வெறுப்பு, தவறான சுய விவரங்களை வைத்துக் கணக்கு தொடங்குதல் அதிகரிப்பதாக தரவுகள் கூறுகின்றன.
நான் பலருடனும் பேசினேன். அவர்கள், ட்விட்டர் பயனர்களை ட்ரோலிங் மற்றும் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் உள்ள அம்சங்களைப் பராமரிப்பது கடினமாக உள்ளது என்று நிறுவனத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள் பிபிசி பனோரமாவிடம் கூறுகின்றனர்.
நட்ஜ் பட்டன் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்கிய தனது குழுவில் உள்ள அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக உள்ளடக்க வடிவமைப்பின் முன்னாள் தலைவர் கூறுகிறார். அவரும் பின்னர் ராஜினாமா செய்தார். ட்விட்டரின் உள் ஆய்வு, அந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ட்ரோலிங்கை 60% குறைத்ததாகக் கூறுகின்றன.
ட்விட்டரில் பணியாற்றும் ஒரு பொறியாளர், பாதுகாப்பு தொடர்பான இந்த மாதிரியான வேலையை இப்போது “யாரும் கவனிப்பதில்லை” என்று என்னிடம் கூறினார். ட்விட்டர் தளத்தை ஒரு கட்டடத்தோடு ஒப்பிட்ட அவர், வெளியில் இருந்து பார்ப்பதற்கு நன்றாக இருப்பதைப் போல் தெரிந்தாலும், உள்ளே “தீப்பிடித்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு பிபிசி தொடர்புகொண்டபோது பதில் தரப்படவில்லை.
ட்விட்டரில் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் அதிகரித்து வருகிறது. சட்ட அமலாக்கத் துறையிடம் போதுமான அளவுக்கு அது கொண்டு செல்லப்படவில்லை.
கருத்து சுதந்திரத்தைத் தடுப்பதையே இலக்காகக் கொண்ட துன்புறுத்தல் பிரசாரங்கள், வெளிநாட்டு செல்வாக்குடன் கூடிய செயல்பாடுகள் போன்றவை தொடர்பான பதிவுகளும் பதில்களும் முன்பு தினமும் நீக்கப்பட்டன. தற்போது அவை “கண்டுபிடிக்கப்படாமல்” போகின்றன என்று ட்விட்டரில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்தார்.
ஈலோன் மஸ்க்கால் கையகப்படுத்தப்பட்டதில் இருந்து என் மீது குறி வைத்து நடக்கும் பெண் வெறுப்பு அதிகரிக்கிறது. பெண் வெறுப்பு மற்றும் தவறான சுய விவரங்களைக் கொண்டு தொடங்கப்படும் புதிய கணக்குகள் 69% அதிகரித்துள்ளதையும் பிரத்யேக தரவு காட்டுகிறது.
பாலியல் வல்லுறவுக்கு உள்ளானவர்கள், ட்விட்டர் கைமாறியதற்குப் பின்னர் செயல்பாட்டில் இருக்கும் கணக்குகளால் குறிவைக்கப்பட்டுள்ளனர். அந்த நபர்கள் மீண்டும் தங்கள் கணக்குகளைத் தீவிரமாகப் பயன்படுத்தத் தொடங்கியவர்களாகவோ அல்லது புதிதாகத் தொடங்கப்பட்ட கணக்குகளாகவோ இருக்க வேண்டும்.
ட்விட்டரில் துன்புறுத்தலுக்கு உள்ளாவது எனக்குப் புதியதல்ல. நான் தவறான தகவல், சதி, வெறுப்பு பற்றிய எனது செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு செய்தியாளர். ஆனால், கடந்த ஆண்டு முழுவதும் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் வெறுப்புப் பதிவுகள் சீராகக் குறைந்து வருவதை நான் கவனித்தேன். பின்னர் நவம்பரில் அது மீண்டும் ட்விட்டரில் மோசமாகிவிட்டதை உணர்ந்தேன்.
அதன்மூலம் நான் நினைத்தது சரிதான் என்பதை உணர்ந்தேன். செய்தியாளர்களுக்கான சர்வதேச மையம் மற்றும் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு குழு நான் பெறும் வெறுப்புப் பதிவுகளைக் கண்காணித்து வருகிறது. மேலும், ட்விட்டரில் நான் குறி வைக்கப்படுவது ஈலோன் மஸ்க் பொறுப்பேற்றதில் இருந்து முன்பு இருந்ததைவிட மும்மடங்காக அதிகரித்துள்ளதாக அவர்களுடைய தரவு வெளிப்படுத்தியது.
அனைத்து சமூக ஊடக தளங்களும் ஆன்லைன் வெறுப்பு, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைச் சமாளிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் அதைச் சமாளிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அத்தகைய நடவடிக்கைகள் ட்விட்டரின் திட்டத்தில் முதன்மையாக இருப்பதாகத் தற்போது தெரியவில்லை.
ட்விட்டரின் தலைமையகம் அமைந்துள்ள சான் ஃபிரான்சிஸ்கோவில் நான் அதற்கான பதில்களைத் தேடத் தொடங்கினேன். ட்விட்டர் செயல்படுவதற்குக் காரணமாக இருக்கும் கணினி ப்ரோகிராமில் வேலை செய்யும் பொறியாளரிடம் இருந்து தொடங்குவதைவிட அந்தப் பதில்களைத் தேடுவதற்கான சிறந்த இடம் எது?
அவர் இன்னும் அங்கு வேலை செய்வதால், அவரது அடையாளத்தை மறைக்கும்படி எங்களிடம் கேட்டுக்கொண்டார். ஆகவே நாங்கள் அவரை சாம் என்று அழைக்கிறோம்.
“வெளியில் இருந்து பார்ப்போருக்கு அனைத்தும் நன்றாகப் போவதைப் போல் தெரியலாம். ஆனால், ட்விட்டர் என்னும் கட்டடத்தின் அனைத்துப் பகுதிகளும் தீப்பிடித்து எரிகின்றன,” என்று அவர் கூறினார்.
பணியாளர் நியமனத்தில் ஏற்பட்ட பெரும் இடையூறுகளால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். ஈலோன் மஸ்க் வாங்கியதில் இருந்து ட்விட்டரின் பணியாளர்களில் பாதிப் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அல்லது பணியை வெளியேறும் முடிவை எடுத்துள்ளனர்.
“முற்றிலும் புதிய நபர், நிபுணத்துவம் இல்லாமல், 20க்கும் மேற்பட்டவர்கள் செய்த வேலையைச் செய்கிறார். இது அதிக ஆபத்திற்கு இடமளிக்கிறது. விஷயங்கள் தவறாகப் போவதற்குப் பல சாத்தியக்கூறுகள் உள்ளன,” என்று சாம் கூறுகிறார்.
பாதுகாப்பு போன்ற முந்தைய அம்சங்கள் இன்னும் உள்ளன. ஆனால் அவற்றை வடிவமைத்து பராமரித்தவர்கள் வெளியேறிவிட்டார்கள் என்பதால் அவை இப்போது கவனிக்க ஆளில்லாதவையாகிவிட்டன என்று அவர் கூறுகிறார்.
“பல விஷயங்கள் உடைந்துவிட்டன. அதை யாரும் கவனிக்கவில்லை. இந்தச் சீரற்ற நடத்தை புரிகிறதல்லவா,” என்று அவர் என்னிடம் கூறுகிறார்.
ஈலோன் மஸ்க் ட்விட்டர் ஊழியர்களை நம்பாததால் ஒரு குழப்ப நிலை நிலவுவதாக அவர் நினைக்கிறார். மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவில் இருந்து பொறியாளர்களை வரவழைத்ததையும் யாரை பணிநீக்கம் செய்வது என்று தீர்மானிப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு பொறியாளர்களின் ப்ரோகிராம் கோட்களை மதிப்பீடு செய்யச் சொன்னதையும் சாம் விவரிக்கிறார். அதுபோன்ற கணினி கோட்களை புரிந்துகொள்ள “மாதங்கள்” ஆகும் என்றும் சாம் என்னிடம் கூறினார்.
ஈலோன் மஸ்க் தன்னைச் சுற்றி வைத்துள்ள பாதுகாப்பின் அளவே இந்த நம்பிக்கையின்மையைக் காட்டிக் கொடுப்பதாக அவர் நம்புகிறார்.
“அவர் அலுவலகத்தில் எங்கு சென்றாலும், குறைந்தது இரண்டு மெய்க்காப்பாளர்கள் இருக்கிறார்கள். மிகவும் பருமனான, உயரமான, ஹாலிவுட் திரைப்பட பாணியிலான மெய்க்காப்பாளர்கள். அவர் கழிவறைக்கு செல்லும்போதுகூட இருக்கிறார்கள்,” என்று சாம் என்னிடம் கூறுகிறார்.
துப்புரவு, கேட்டரிங் ஊழியர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறும் சாம், ஈலோன் மஸ்கிற்கு இது பணத்தைப் பற்றியது அல்ல என்று நினைக்கிறார்.
ட்விட்டருடைய உள்ளடக்க வடிவமைப்பின் முன்னாள் தலைவரான லிசா ஜென்னிங்ஸ் யங், வெறுப்புப் பேச்சுகளில் இருந்து பயனர்களைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட அம்சங்களை அறிமுகப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர்களில் ஒருவர். ஈலோன் மஸ்க் பொறுப்பேற்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ட்ரோலிங் செய்வதற்கான ஒரு மையமாக ட்விட்டர் இருந்தது. ஆனால், அதைக் கட்டுப்படுத்துவதில் தனது குழு நல்ல முன்னேற்றம் கண்டதாக அவர் கூறுகிறார். பிபிசியால் பார்க்கப்பட்ட ட்விட்டரின் உள்கட்டமைப்பு ஆராய்ச்சி இந்தக் கூற்றை ஆதரிக்கிறது.
“முன்பும்கூட அனைத்துமே சரியானதாக இருக்கவில்லை. ஆனால், நாங்கள் அதற்காக முயற்சி செய்துகொண்டிருந்தோம். எல்லா நேரத்திலும் நாங்கள் விஷயங்களைச் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தோம்,” என்று அவர் கூறுகிறார். ஈலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதும் ஜென்னிங்ஸ் அங்கிருந்து வெளியேறினார். அதற்குப் பிறகு, அவர் தனது அனுபவத்தைப் பகிரங்கமாகப் பேசுவது இதுவே முதல் முறை.
ஜென்னிங்ஸ் யங்கின் குழு பாதுகாப்பு பயன்முறை உட்படப் பல புதிய அம்சங்களில் வேலை செய்தது. இது தவறான கணக்குகளைத் தாமாகவே தடுத்துவிடும். அவர்கள் தவறான தகவல்களைக் கொண்ட ட்வீட்டுகளுக்கு பயன்படுத்தப்படும் லேபிள்களை வடிவமைத்தனர். மேலும், “தீங்கு விளைவிக்கும் ரிப்ளை நட்ஜ்” என்று அழைக்கப்படும் ஒன்றையும் வடிவமைத்தனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தூண்டுதல் வார்த்தைகள், தீங்கு விளைவிக்கும் மொழியைக் கண்டறிந்து ட்வீட்டை அனுப்புவதற்கு முன்பே பயனர்களை அந்த “நட்ஜ்” எச்சரிக்கும்.
“ஒட்டுமொத்தமாக 60% பயனர்கள் தங்களுடைய தீங்கு விளைவிக்கும் பதிவை நீக்கியிருந்தார்கள் அல்லது திருத்தியிருந்தார்கள். “இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், நாங்கள் ஒருமுறை மக்களைத் தூண்டிய பிறகு, அவர்கள் எதிர்காலத்தில் தீங்கு விளைவிக்கும் பதிவுகளை 11% குறைவாக எழுதினார்கள்.”
ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம் மற்றும் செய்தியாளர்களுக்கான சர்வதேச மையம் ஆகியவற்றால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, ட்விட்டரில் என் மீதான வெறுப்புப் பேச்சுகள் குறைந்ததாகத் தோன்றிய நேரத்தில் இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் செயல்படுத்தப்பட்டன. இரண்டையும் நேரடியாகத் தொடர்புபடுத்துவது சாத்தியமற்றது. ஆனால், இந்த நடவடிக்கைகளின் செயல்திறனைப் பற்றி சான்றுகள் என்ன சொல்கின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, ஓர் இணைப்பை வரைய முடியும்.
ஆனால் அக்டோபர் 2022இன் பிற்பகுதியில் மஸ்க் சமூக ஊடக நிறுவன பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, லிசாவின் அனைத்து குழுவினரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடைசியில் லிஸாவும் நவம்பர் இறுதியில் நிறுவனத்தைவிட்டு வெளியேற முடிவு செய்தார். ‘தீங்கு விளைவிக்கும் பதில்’ போன்ற அம்சங்களுக்கு என்ன ஆனது என்று நான் ஜென்னிங்ஸ் யங்கிடம் கேட்டேன்.
“இந்த நேரத்தில் அதுகுறித்து வேலை செய்ய யாரும் இல்லை,” என்று அவர் என்னிடம் கூறினார். தாம் செய்து கொண்டிருந்த திட்டங்கள் என்ன ஆயின என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே நாங்கள் ஒரு பரிசோதனையை முயன்றோம். ஒரு ட்வீட்டை பரிந்துரைத்த அவர், அது பலரது கவனத்தையும் தூண்டும் என்று எதிர்பார்த்திருப்பார்.
“ட்விட்டர் ஊழியர்கள் சோம்பேறிகள் தோல்வியடைந்தவர்கள், தங்க வாயில் பாலத்தில் ஏறிக் குதித்து இறந்து விடுகிறார்கள்,” என்று எழுதப்பட்ட ட்வீட்டை அவரது பதிலுக்கான ட்வீட்டுகளில் ஒன்றாக எனது தனிப்பட்ட முகவரியில் இருந்து பகிர்ந்தேன்.
ஆனால் ஜென்னிங்ஸ் யங் ஆச்சரியப்படும் வகையில் எந்தத் தூண்டுதல் தகவலும் அனுப்பப்படவில்லை. நாங்கள் பகிர்ந்த புண்படுத்தும் மொழியுடன் கூடிய மற்றொரு ட்வீட் கவனிக்கப்பட்டது. ஆனால், ஒரு பயனரின் மரணத்தை விரும்பும் இடுகையைத்தான் அந்தத் தூண்டுதல் பொறி எடுத்திருக்க வேண்டும் என்று லிசா கூறினார். சாம் கணித்தபடி, அது எந்த நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்டதோ அது போல் வேலை செய்யவில்லை.
இந்த புலனாய்வின்போது மஸ்க் பொறுப்பேற்றதில் இருந்து ட்விட்டரில் தாங்கள் பெறும் வெறுப்பு எப்படி அதிகரித்து வருகிறது என்பதை என்னிடம் கூறிய பலரிடமிருந்து எனக்கு செய்திகள் கிடைத்துள்ளன. இனவெறி, மதவெறி மற்றும் பெண் வெறுப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் அந்த உதாரணங்களைப் பகிர்ந்துள்ளேன்.
கிளாஸ்கோவில் வசிக்கும் எல்லி வில்சன், பல்கலைக்கழகத்தில் இருந்தபோது பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கடந்த கோடையில் அந்த அனுபவத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் வெளியிடத் தொடங்கினார். அந்த நேரத்தில், ட்விட்டரில் தனக்கு ஆதரவான பதிலை அவர் பெற்றார்.
ஆனால் ஜனவரி மாதம் தன்னைத் தாக்கியவருக்கு தண்டனை கிடைத்தது பற்றி அவர் ட்வீட் செய்தபோது, அவருக்கு வெறுக்கத்தக்க பதில்கள் வந்தன. அவதூறான மற்றும் பெண்மை விரோத பதில்கள் அவருக்கு வந்தன. சிலர் அவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகத் தகுதியானவர் இவர் என்றுகூட விமர்சித்தனர்.
“நான் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை அல்லது இது நடக்கவில்லை என்றும் நான் பொய் சொல்கிறேன் என்றும் சிலர் கூறுவதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. இது இரண்டாம் நிலை அதிர்ச்சி போன்றது,” என்று வில்சன் என்னிடம் கூறினார்.
ஈலோன் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்துவதற்கு முன்பு சில ட்விட்டர் கணக்குகள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால், வில்சன் மீதான வெறுப்புணர்வைத் தூண்டும் கணக்குகளை நான் பார்த்தபோது, மஸ்க் கையகப்படுத்தியதில் இருந்தே ட்ரோல்களின் ப்ரொஃபைல்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியிருந்ததை நான் கவனித்தேன், அவை முன்பு இடைநிறுத்தப்பட்டு சமீபத்தில் மீண்டும் நிறுவப்பட்ட கணக்குகள்.
அதிலும் ஈலோன் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்திய நேரத்தில் சில கணக்குகள் அமைக்கப்பட்டன. சுயவிவரப் படங்கள் அல்லது ஒருவரது அம்சங்களை அடையாளம் காணாமல், வெறுப்பை வெளிப்படுத்துவதில் அவர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தோன்றியது. பெண் வெறுப்பு மற்றும் வெறுப்புணர்வை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட பிரபலமான கணக்குகளின் உள்ளடக்கத்தைப் பலர் பின்தொடர்ந்து தொடர்பு கொள்கிறார்கள்.
சர்ச்சைக்குரிய செல்வாக்கு மிக்கவரான ஆண்ட்ரூ டேட் உட்பட, இடைநிறுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகளை மீட்டெடுக்க மஸ்க் முடிவு செய்த பிறகு ட்விட்டரில் மீண்டும் அவர்களின் செல்வாக்கு காணப்பட்டது.
“அந்த நபர்களுக்கு ஒரு தளத்தை அனுமதிப்பதன் மூலம், நீங்கள் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறீர்கள். மேலும், ‘இது சரி, உங்களால் முடியும்’ என்று சொல்கிறீர்கள்.” இத்தகைய பல சர்ச்சை கணக்குகள் வில்சன் தொடர்பில் இருக்கும் மற்ற பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர்களையும் இலக்கு வைத்தன.
இது தொடர்பாக பிபிசி எழுப்பிய கேள்விக்கு ஆண்ட்ரூ டேட் பதிலளிக்கவில்லை.
இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்ட்ராட்டஜிக் டயலாக் (ஐஎஸ்டி ) என்ற புதிய ஆராய்ச்சி அமைப்பு, தவறான தகவல் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் தகவல்களை விசாரிக்கும் பிரிட்டனை சேர்ந்த ஒரு சிந்தனைக் குழு. அந்தக் குழுவும் ட்ரோல் கணக்குகள் பற்றி நான் கண்டுபிடித்ததை எதிரொலிக்கிறது.
ஈலோன் மஸ்க் பொறுப்பேற்றதில் இருந்து பல்லாயிரக்கணக்கான புதிய கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை இது காட்டுகிறது. அது உடனடியாக அறியப்பட்ட தவறான ஃப்ரொஃபைல்களை பின்பற்றியது – மஸ்க் பொறுப்புக்கு வருவதற்கு முன்பிருந்த நிலையைவிட இது 69% அதிகம்.
இந்தத் தவறான நெட்வொர்க்குகள் இப்போது வளர்ந்து வருவதாக ஐஎஸ்டி ஆராய்ச்சி தெரிவிக்கிறது – மேலும் மஸ்க்கின் கையகப்படுத்துதல் இந்த வகையான கணக்குகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் ஒரு “அனுமதி சூழலை” உருவாக்கியுள்ளது.
மஸ்க் கையகப்படுத்தியதில் இருந்து கவனம் செலுத்திய முக்கிய சில முன்னுரிமைகள் – அவரது இடுகைகளின்படி – சமூக ஊடக நிறுவனத்தை லாபகரமாக்குவது மற்றும் கருத்து சுதந்திரத்தை வென்றெடுப்பதாகும்.
டிசம்பர் 2022இல், பழைய தலைமையின் கீழ் நிறுவனம் அதன் மிதமான மற்றும் இடைநீக்கக் கொள்கைகளை ஏன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று தாம் நம்புவதை விளக்க “ட்விட்டர் கோப்புகள்” எனப்படும் உள் ஆவணங்களை மஸ்க் வெளியிட்டார்.
ஆனால் ட்விட்டருக்கு உள்ளே இருந்தவர்கள், மஸ்க் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனர்களை முற்றிலும் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு அளித்த முன்னுரிமையில் இருந்து விலகிக் கொண்டதாக உணர்கிறார்கள். குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வேண்டுமென்றே தவறாக வழிநடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட போட் கணக்குகள் எனப்படும் நெட்வொர்க்குகள் உட்பட, அவர் எதிராக வற்புறுத்திய ஆபத்தான உள்ளடக்கம்கூட, முன்பு இருந்ததைப் போல் கையாளப்படவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ட்விட்டர், பாதுகாக்க முயல்வது தனிப்பட்ட ட்ரோல்கள் மட்டுமின்றி, “செல்வாக்கு செயல்பாடுகள்” என்று அழைக்கப்படும் – ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அதிருப்தியாளர்களையும் பத்திரிகையாளர்களை இலக்கு வைக்கும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரசாரங்களையும் தான் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ரே செரடோ இந்தச் செயல்பாடுகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவில் பணியாற்றினார். புதிய தலைமையின் கீழ் பயனர்களைப் பாதுகாப்பதற்கான தெளிவான பார்வை இல்லை என்று அவர் உணர்ந்ததால் நவம்பர் மாதம் வெளியேறினார்.
“தினமும்” இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைத் தனது குழு அடையாளம் காணும் என்று அவர் கூறுகிறார். இப்போது அவரது அணி “அழிந்து” விட்டதுடன் “குறைந்த திறன்” கொண்டதாகவும் உள்ளது.
“பத்திரிக்கையாளர்கள் வெளியே சென்று அவர்களது குரலை ஒலிக்கவும், அரசாங்கத்தை விமர்சிக்கவும் ட்விட்டர் ஒரு புகலிடமாக இருந்திருக்கலாம். ஆனால் அது போல இனி நடக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.”
“ரஷ்யாவிலிருந்து சீனா வரையிலான சிறப்புப் பகுதிகள் அல்லது அச்சுறுத்தக் கூடியவர்களை உள்ளடக்கியிருக்கும் குழுவில் பல முக்கிய நிபுணர்கள் இல்லை,” என்று அவர் என்னிடம் கூறுகிறார்.
ரோரி என்று நாங்கள் அழைக்கும் மற்றொரு உள் நபர், அந்த நிபுணத்துவத்தின் ஃபில்டர் முறை குறித்தும் மிகவும் கவலை கொண்டுள்ளார். மேலும் இது மஸ்கின் முன்னுரிமையை எவ்வாறு குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது எனப் பார்த்தால், பாதிக்கப்பட்டவர்கள் துஷ்பிரயோகத்திற்கான இணைப்புகளைப் பகிர்ந்துகொள்ள ட்விட்டரை பயன்படுத்துவதைத் தடுக்கிறது என அறியலாம் என்கிறார் அவர். ரோரி சமீப காலம் வரை குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டலைக் கையாளும் குழுவின் ஒரு பகுதியாகப் பணிபுரிந்தார் [சிஎஸ்இ].
குழந்தைகளைப் பற்றிய தவறான உள்ளடக்கத்தைப் பகிரும் கணக்குகளை அவரது குழு அடையாளம் காணும். அதில் மோசமானவை மீது நடவடிக்கை எடுக்க சட்ட அமலாக்க அமைப்பைத் தூண்டும். மஸ்க் கையகப்படுத்துவதற்கு முன்பு வரை இதுவொரு பெரிய பிரச்னையாக இருந்தது. ஏற்கெனவே குறைவான பணியாளர்களைக் கொண்டுள்ள தமது குழுவுக்கு இப்போது அந்தப் பணி மேலும் அதிகரித்துள்ளது என்று அவர் அஞ்சுகிறார்.
“ஒவ்வொரு நாளும் நீங்கள் அந்த வகையான விவகாரத்தை அடையாளம் காண முடியும்,” என்று அவர் கூறுகிறார்.
ஆனால் இவரது குழுவின் அளவு மஸ்க் கையகப்படுத்திய உடனேயே குறைக்கப்பட்டது. நாங்கள் 20 பேரிலிருந்து ஆறு அல்லது ஏழு பேர் வரையாகச் சுருங்கினோம் என்று அவர் கூறினார்.
ரோரி இது பற்றிப் பேசும்போது, தான் வெளியேறும் முன் – மஸ்க் அல்லது புதிய நிர்வாகத்தின் வேறு எந்த உறுப்பினரும் தன்னையோ தமது பழைய குழுவையோ தொடர்பு கொள்ளவில்லை. இவர்களுக்கு இந்த ஆய்வில் பல ஆண்டுகள் அனுபவம் இருந்தது.
“ஒரு நிறுவனத்தை நீங்கள் கையகப்படுத்திவிட்டால் திடீரென்று உங்களுக்கு அறிவு இருப்பதாக, அதுவும்[குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டலை] பிரச்னைகளைச் சமாளிக்கத் தெரிந்த நிபுணர்கள் இல்லாமல் செயல்படும் அளவுக்கு இருப்பதாக நம்ப முடியாது,” என்று ரோரி கூறுகிறார்.
“ட்விட்டரை பாதுகாப்பானதாக்க” உதவுவதற்காக ஒரு மாதத்தில் மட்டும் நான்கு லட்சம் கணக்குகளை அகற்றியதாக ட்விட்டர் கூறுகிறது. ஆனால், சட்ட அமலாக்கத்துடன் இந்த உள்ளடக்கம் குறித்த கவலைகளைக் பகிராவிட்டால், இடைநீக்கம் செய்யப்பட்ட கணக்கு வைத்திருந்தவர்கள், புதிய கணக்குகளைத் தொடங்கி மீண்டும் அதே வேலையைக் காட்டுவார்கள்,” என்று ரோரி கவலைப்படுகிறார்.
இடைநிறுத்தப்பட்ட கணக்குகள், ட்விட்டருக்கு மீண்டும் வரவேற்கப்படும் வேளையில், புண்படுத்தும் நோக்குடன் வருபவர்கள், புதிய கணக்குகளை எளிதாக அமைக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
ஈலோன் மஸ்க்கிடம் ட்விட்டரை பற்றிய அவரது பார்வை, அதன் கையகப்படுத்துதல் மற்றும் அது உண்மையில் எப்படி இயங்குகிறது என்று அவர் நினைக்கிறார் என்று கேட்க விரும்பினேன்.
நான் அவரை மின்னஞ்சல், ட்வீட் மற்றும் ட்விட்டர் “வாக்கெடுப்பு” மூலம் தொடர்பு கொள்ள முயன்றேன். இது உண்மையான கருத்துக் கணிப்பு அல்ல, ஆனால் ட்விட்டரின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க மஸ்க் இந்த வாக்குகளைப் பயன்படுத்தினார். மேலும் இது அவரது கவனத்தை ஈர்க்கும் என்று நான் நம்பினேன்.
40,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் வாக்களித்தனர் மற்றும் 89% பேர் மஸ்க் என்னுடன் நேர்காணல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், அவரிடம் இருந்து எனக்கு பதில் வரவே இல்லை.
பிபிசி பனோரமாவின் கேள்விக்கு ட்விட்டரோ, ஈலான் மஸ்க்கோ இதுவரை முறைப்படி பதில் அளிக்கவில்லை.
பிபிசியின் ஒட்டுமொத்த தகவல் தொடர்பு குழுவினரும் ஒன்று தாமாகவே பணிவிலகிவிட்டனர் அல்லது நீக்கப்பட்டு விட்டார்கள் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
பயனர்களின் குரலைப் பாதுகாப்பதும் மதிப்பதும் தொடர்ந்து மிகவும் மதிப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று ஆன்லைனில் காணக் கிடைக்கும் ட்விட்டரின் கொள்கைகள் கூறுகின்றன.
என்னுடைய புலனாய்வுக் கட்டுரை வெளியான பிறகு ஈலோன் மஸ்க், அதுகுறித்து ட்வீட் செய்திருந்தார். “நல்ல விஷயங்கள் நிறைந்த சொர்க்கமாக திகழ்ந்த ட்விட்டரை ட்ரோல்கள் நிறைந்த ஒன்றாக மாற்றியதற்காக மன்னிக்கவும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.