இஸ்ரேல் பாதுகாப்பு படையினருடன் மோதல்: 6 பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை!!
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனிடையே, மேற்குகரையின் ஹவ்ரா பகுதியில் இஸ்ரேலிய சகோதரர்கள் 2 பேரை பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் கடந்த மாதம் 26-ம் தேதி சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், 2 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மேற்குகரையின் ஜெனின் அகதிகள் முகாமில் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜெனின் முகாமிற்கு இஸ்ரேல் படைகள் சென்றன. அப்போது, இஸ்ரேல் படையினர் மீது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, இஸ்ரேல் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரபுக்கும் இடையே நடந்த மோதலில் இஸ்ரேலிய சகோதரர்களை சுட்டுக்கொலை செய்த பயங்கரவாதி உள்பட பாலஸ்தீனிய ஆயுத குழுவை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 60 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனிய ஆயுத குழுக்களை சேர்ந்தவர்கள். அதேபோல், இந்த ஆண்டு இதுவரை பாலஸ்தீனியர்கள் தாக்குதலில் 14 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.