அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலைக்கு குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி இரண்டுமே பொறுப்பு: அதிபர் வேட்பாளர் நிக்கி ஹாலே குற்றச்சாட்டு!!
அமெரிக்காவின் தற்போதைய நிதி நிலைமைக்கு குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி இரண்டுமே பொறுப்பு என நிக்கி ஹாலே குற்றம்சாட்டியுள்ளார். 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி ஆகியோர் போட்டியிட போவதாக அறிவித்துள்ளனர். மூவரும் தற்போதே தேர்தல் பிரசாரங்களை தொடங்கியுள்ளதால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் தற்போதுள்ள பொருளாதார மந்த நிலைக்கு குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியுமே முழு பொறுப்பு என நிக்கி ஹாலே குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து யுஎஸ்ஏ டுடே இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், “கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு செய்த செலவினங்களால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுநோய் சமயத்தில் ஏற்பட்ட செலவினங்களை இரண்டு கட்சியினரும் காரணம் காட்டுகின்றனர். நான் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால், அமெரிக்க எதிர்ப்பு நாடுகளான சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு நிதியுதவி செய்வதை நிறுத்துவேன். அதற்காக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.