நிராயுத போர்க் கைதி சுட்டுக்கொலை – கொதிநிலை அடையும் உக்ரைன் போர் !!
உக்ரைனின் நிராயுதபாணியான போர்க் கைதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது, பேசுபொருளாகியுள்ள நிலையில், தமது படைவீரரை சுட்டுக்கொன்ற ரஷ்ய படையினரை கண்டறிவோம் என உக்ரைன் சூளுரைத்துள்ளது.
கொலையாளிகளை தாம் கண்டுபிடிப்போம் என உக்ரைன் அதிபர் வெலோடிமீர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர் கைதி, உக்ரைனை புகழ்ந்து கருத்து கூறியதை அடுத்து, தானியங்கி துப்பாக்கியால் சூடும் காட்சிகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.
12 விநாடிகளைக் கொண்ட காணொளி குறித்து குற்றவியல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்பட்ட திமோஃபி ஷதுரா என்ற உக்ரைன் இராணுவ வீரரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் கூறியுள்ளது.
அண்மைக் காலமாக கடுமையான மோதல்கள் இடம்பெறும் பஹ்மூத் நகர் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே அவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது படைவீரரின் உடல் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ளதாகவும் சடலத்தை மீளப்பெற்ற பின்னரே அவரை அடையாளம் காண முடியும் எனவும் உக்ரைன் இராணுவம் கூறியுள்ளது.
“நிராயுதபாணியான கைதியை சுடுவது சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் போர் பழக்கவழக்கங்களின் இழிந்த மற்றும் வெட்கக்கேடான புறக்கணிப்பு என உக்ரைனின் ஆயுதப்படைகளின் ஜெனரல் தர அதிகாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உக்ரைனியர்களை கொடூரமாக அழிப்பதே தமது முக்கிய குறிக்கோள் என்பதை இதன்மூலம் ரஷ்ய ஆக்கிமிப்பாளர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.